டெல்லி சப்தர்ஜங் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள ஐசியூ வார்டில் திடீர் தீ விபத்து!: நோயாளிகள் அச்சம்..!!

2021-03-31@ 12:50:13

டெல்லி: டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். டெல்லியில் சப்தர்ஜங் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று இந்நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை எழுந்தது. நோயாளிகள் வெளியேற முடியாமல் அச்சமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து 15 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனையின் பிற பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

தீயணைப்பு வீரர்களின் பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தை அடுத்து ஐசியூ பிரிவில் இருந்த 60 நோயாளிகள் மற்ற வார்டுகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டதால் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. மேலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டில் அதிக படுக்கைகளை கொண்ட மருத்துவமனைகளில் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக ஜனவரி மாதம் இந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.