உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 51.5 லட்சம், 251 காஸ் அடுப்புகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை

2021-03-31@ 00:15:29

சென்னை: உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 51.5 லட்சம் மற்றும் 251 காஸ் அடுப்புகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், தங்க நகைகள் மற்றும் பரிசுப்பொருட்களை அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில், அண்ணாநகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், 51 லட்சம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, அண்ணாநகர் போலீசார், தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜாவுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், காரில் வந்த ஆசிப் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, சீட்டு பணம் கட்டுவதற்கு எடுத்து சென்றதாக தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணமில்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், பெரம்பூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.  ராயபுரம் எஸ்.என்.செட்டி சாலையில் நேற்று முன்தினம் இரவு பறக்கும்படை அதிகாரி அப்துல் ரவுப் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை நடத்தினர். அதில், 251 காஸ் அடுப்புகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டிரைவர் முஸ்தாக் (24) என்பவரிடம் கேட்டபோது, கடைக்கு எடுத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால், அதற்கான ஆவணம் இல்லாததால், மினி லாரியுடன் காஸ் அடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ராயபுரம் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவை, வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு வரப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஆவடி தொகுதியின் தேர்தல் நிலையான கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர் தலைமையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆவடி அருகே பாலவேடு 400 அடி வெளிவட்ட சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை அதிகாரிகள் மறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமடக்கி நிறுத்தினர். அதஅந்த காரில் வந்த ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியை சேர்ந்த சத்தியநாராயணன்(40) என்பவர் இருந்தார். காரைசோதனை செய்தபோது அதில் இரண்டரை லட்ச ரூபாய் வைத்திருந்தார். இதுபற்றி அதிகாரிகள் விசாரித்தபோது, உறவினர் திருமணத்திற்காக காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை எடுக்க செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல்செய்து ஆவடி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பரமேஸ்வரிடம் ஒப்படைத்தனர். அவர், அந்த பணத்தை ஆவடி தாசில்தார் செல்வம் மூலம் அரசின் கருவூலத்தில் ஒப்படைத்தார். மேலும், உரிய ஆவணத்தை காண்பித்துவிட்டு பணத்தை பெற்றுச் செல்லும்படிசத்திய நாராயணனுக்கு அறிவுரை கூறி அனுப்பினர்.