தேர்தலையொட்டி வாகன கெடுபிடி எதிரொலி: பொய்கை சந்தையில் மாடுகள் விற்பனை மந்தம்

2021-03-30@ 21:08:52

வேலூர்: வேலூர் மாவட்டம் பொய்கையில் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, ஆந்திர மாநிலம் புங்கனூர், வி.கோட்டா, கர்நாடக மாநிலம் முல்பாகல் உட்பட பல்வேறு இடங்களில் இருந்தும், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் கறவை மாடுகள், உழவு மாடுகள், காளைகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் போன்றவை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் இதையொட்டி காய்கறி சந்தையும் நடக்கிறது.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் இச்சந்தையில் சராசரியாக ரூ.3 முதல் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக பொய்கை மாட்டுச்சந்தையும் வெறிச்சோடியது. படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை மீண்டும் களைக்கட்ட தொடங்கிய பொய்கை மாட்டுச்சந்தை தனது வழக்கமான வர்த்தக நிலையை எட்டியது. இந்த நிலையில் பிப்ரவரி மாத கடைசியில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது.

அதன்படி உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொண்டு செல்வதற்கு முட்டுக்கட்டை விழுந்தது. இது பொய்கை மாட்டுச்சந்தை வர்த்தகத்திலும் எதிரொலித்தது. கடந்த 3 வாரங்களாக டல்லடித்த பொய்கை மாட்டுச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து 4வது வாரமாகவும் டல்லடித்தது.  இதனால் பொய்கை மாட்டுச்சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் உள்ளூரை சேர்ந்த விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் மொத்த வர்த்தகமே ரூ.75 லட்சத்தை தாண்டவில்லை என்று சலித்துக் கொண்டனர் விவசாயிகள்.