லக்னோ: இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. கடந்த 19 நாளாக தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில், ஒரே நாளில் 56,211 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினசரி பாதிப்பில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு, சட்டீஸ்கர் ஆகிய 8 மாநிலங்கள் 84.5 சதவீதத்தை கொண்டுள்ளன. இதற்கிடையே, விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது, இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் இணைந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹர்மன் ப்ரீத் கவுர் தனது டுவிட்டர் பக்கத்தில், எதிர்பாராத விதமாக எனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நான் இப்போது நலமாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனை படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் கடந்த 7 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். உங்கள் அன்பினாலும், கடவுளின் அருளினாலும் பூரண குணமடைந்து விரைவில் களத்திற்கு திரும்புவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா உறுதியானதால், லக்னோவில் உள்ள தனது வீட்டில் ஹர்மன் ப்ரீத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹர்மன் ப்ரீத் பங்கேற்றார். அதன் பின்னர் கடந்த 4 நாட்களாக சிறிய காய்சல் ஏற்பட்டதாகவும், அவருக்கு செய்த பரிசோதனையில் இன்று கொரோனா உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அண்மையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் சச்சின், யூசப் பதான், பத்ரிநாத், இர்பான் பதான் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.