”திக்ரி எல்லையில் சாலையின் இரு பக்கங்களிலும் 50 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு ட்ராக்டர்கள் நிற்கின்றன,” என்கிறார் கமல் ப்ரார்.  அவரும் 20 விவசாயிகளும் ஹரியானாவின் ஃபதெஹாபாத் மாவட்டத்திலிருந்து ஐந்து ட்ராக்டர்களிலும் இரண்டு ட்ராலிகளிலும் ஜனவரி 24 அன்று திக்ரியை அடைந்தனர்.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி 2020, நவம்பர் 26லிருந்து  பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடும் தலைநகர எல்லையின் மூன்று முக்கிய தளங்களில் ஒன்று திக்ரி.

போராட்டங்களின் ஒரு பகுதியாக முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரிய அளவிலான ட்ராக்டர் ஊர்வலத்தை குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருக்கின்றனர்.

ஊர்வலத்தில் நிர்மல் சிங்கும் கலந்து கொள்கிறார். பஞ்சாபின் வஹாப்வாலா கிராமத்திலிருந்து கொண்டு வந்த நான்கு ட்ராக்டர்களை நிறுத்துமிடம் கண்டுபிடிக்கவே பல மணி நேரங்கள் அவருக்கு ஆகியிருக்கிறது. கிசான் மஜ்தூர் ஏக்தா யூனியன் என்ற பதாகையின் கீழ் அவருடன் 25 பேர் வஹாப்வாலாவிலிருந்து வந்திருக்கிறார்கள். “நிறைய மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ட்ராக்டர்களின் எண்ணிக்கை பெருகுவதை பார்ப்பீர்கள்,” என்கிறார்.

PHOTO • Shivangi Saxena
PHOTO • Shivangi Saxena
PHOTO • Shivangi Saxena

இடது: ஹரியானாவின் சூரெவலா கிராமத்து பெண்கள் குடியரசு தின ட்ராக்டர் அணிவகுப்புக்கு தயாராகிறார்கள். நடுவே: பிரதான மேடையில் நடக்கும் பேச்சுகளை கவனிக்கிறார்கள். வலது: ராஜ் கவுர் பிபி (திக்ரி எல்லையில் மருமகளுடன்), “பெண்களின் வலிமையை அரசு ஜனவரி 26 அன்று பார்க்கும்’ என்கிறார்

“அணிவகுப்பு அன்று ஒவ்வொரு ட்ராக்டருக்கும் பத்து பேர் இருப்பார்கள்,” என்கிறார் கமல் ப்ரார். “அமைதியான ஊர்வலமாக இருக்கும். காவலர்கள் கொடுத்த வழியைத்தான் பின்பற்றவிருக்கிறோம்.  ஊர்வலத்தின்போது விபத்தோ ஒழுங்கின்மையோ நேர்வதை தடுக்கவென விவசாயத் தலைவர்களின் மேற்பார்வையில் தன்னார்வலர் குழுக்கள் பயிற்றுவிக்கப்படுன்றன.”

சமூக சமையற்கூடங்கள் ட்ராக்டர் அணிவகுப்புக்கு முன் விவசாயிகளுக்கு தேநீரும் காலையுணவும் அளிக்கும். வழியில் வேறெங்கும் உணவு கிடைக்காது.

பெண் விவசாயிகள்தான் ஊர்வலத்துக்கு தலைமை தாங்குவார்கள். திக்ரி சாலைகளில் பெண்கள் குழுக்கள் ட்ராக்டர்களை ஓட்டி ஜனவரி 26 ஊர்வலத்துக்கு பயிற்சி எடுக்கின்றனர்.

ஊர்வலத்துக்கு தலைமை தாங்கும் பெண்களில் 65 வயது ராஜ் கவுர் பிபியும் ஒருவர். ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்ட கிராமத்தை சேர்ந்தவர். “பெண்களின் வலிமையை அரசாங்கம் (ஜனவரி) 26 அன்று பார்க்கும்,” என்கிறார்.

பாரதிய கிசான் சங்கம் தலைமை தாங்கும் 20000 ட்ராக்டர்கள் ஜனவரி 24 இரவு திக்ரி எல்லைக்கு வந்து சேர்ந்தன. பஞ்சாபிலுள்ள பத்திந்தா மாவட்டத்தின் டப்வாலி மற்றும் சங்க்ரூர் மாவட்டத்தின் கனவுரி எல்லை வழியாக அவர்கள் வந்தனர்.

PHOTO • Shivangi Saxena
PHOTO • Shivangi Saxena

இடது: பத்திந்தாவிலிருந்து ட்ரக்குகள் வந்து திக்ரி எல்லையை அடைகின்றன. வலது: தலால் கப்பை சேர்ந்த ஆண்கள் ட்ராக்டர் அணிவகுப்புக்கு தயாராகின்றனர்

ட்ராக்டர்களில் காத்திருப்பவர்களில் 60 வயது ஜஸ்க்ரன் சிங்கும் ஒருவர். பஞ்சாபின் ஷேர்கன்வாலா கிராமத்திலிருந்து ஐந்து ட்ராக்டர்களில் விவசாயிகளுடன் நவம்பர் 27ம் தேதியே திக்ரிக்கு வந்துவிட்டார். “அப்போதிருந்து நாங்கள் இங்கு எந்தவித புகாருமின்றி நடத்தை கேடோ திருட்டோ ஒழுங்கின்மையோ இன்றி அமர்ந்திருக்கிறோம்,” என்கிறார் அவர்.

திக்ரியிலிருந்து பஞ்சாபில் இருக்கும் அவரின் ஊரான மன்சாவுக்கு போய் வந்து கொண்டிருக்கிறார். ஜனவரி 23ம் தேதி மேலுமொரு 25 விவசாயிகளை பத்து ட்ராக்டர்களில் அழைத்து வந்தார். “ஜனவரி 26ம் தேதி வரலாற்றில் இடம்பெற போகும் நாளாக இருக்கும். நாட்டுக்கே உணவு கொடுப்பவர்கள் பெரும் ஊர்வலத்தை நடத்தவிருக்கிறார்கள். மக்களின் இயக்கமாக மாறி விட்டது,” என்கிறார் அவர்.

40 வயது தேவராஜ் ராய் என்ற கலைஞரும் குடியரசு தினத்துக்காக திக்ரியில் காத்திருக்கிறார். மேற்கு வங்கத்தின் ஹல்தியாவிலிருந்து மூன்று பேருடன் கடந்த வாரம் ரயிலில் வந்து சேர்ந்திருக்கிறார். சர் சோட்டு ராம் போன்ற வரலாற்று தலைவர்களின் கட் அவுட்டுகளை பிஜு தாப்பர் என்கிற இன்னொரு கலைஞருடன் சேர்ந்து தேவராஜன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். “விவசாயிகளை ஆதரிப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம். எங்களின் சொந்த பணத்தை செலவழித்து இவற்றை உருவாக்குகிறோம். என்னை பொறுத்தவரை கலை சமூகத்துக்காக பேச வேண்டும்,” என்கிறார் அவர். டிசம்பர் 16ம் தேதி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மரித்துப் போனதாக சொல்லப்படும் பாபா ராம் சிங்கின் உருவமும் கட் அவுட்களில் இருந்தது.

PHOTO • Shivangi Saxena

மேல் இடது மற்றும் நடுவே: தேவராஜன் ராய் மற்றும் பிஜு தாப்பர் ஆகியோர் சர் சோட்டு ராம் போன்ற வரலாற்று தலைவர்களை விவசாயிகளின் குடியரசு தின அணிவகுப்புக்கு கட் அவுட்களாக தயாரிக்கிறார்கள். மேலே வலது: மேற்கு வங்கத்தை சேர்ந்த இஷிதா என்கிற மாணவி, விவசாய சட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ட்ராக்டரில் மாட்டும் பதாகையாக தயாரித்துக் கொண்டிருக்கிறார்

திக்ரியில் மேற்கு வங்க முதுகலை மாணவியான இஷிதா போன்ற ஆதரவாளர்களும் இருக்கின்றனர். விவசாய சட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ஓவியங்களாக்கி ட்ராக்டரில் மாட்டும் பதாகையாக தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இச்சட்டங்கள் முதலில் 2020 ஜூன் 5 அன்று ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாக அம்மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே அம்மூன்று சட்டங்கள்.

மூன்று சட்டங்களும் பெரு வணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ள வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை ஆகியவற்றை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.

லூதியானா மாவட்டத்தின் பைனி சகிபிலிருந்து திக்ரிக்கு ஜனவரி 21ம் தேதி வந்த ஜஸ்ப்ரீத், “எத்தனை விவசாயிகள் அணிவகுப்பில் கலந்து கொள்கிறார்கள் என்பது முக்கியமல்ல,” என்கிறார். அவருடைய கிராமத்திலிருந்து அவர் ஒருவர் மட்டும்தான் வந்திருக்கிறார். “ஒவ்வொரு டவுனும் கிராமமும் இப்போராட்டம் வெற்றியடைய பங்களிக்க வேண்டுமென்பதே முக்கியம்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading tamil news channel as a journalist.

Shivangi Saxena

Shivangi Saxena is a third year student of Journalism and Mass Communication at Maharaja Agrasen Institute of Management Studies, New Delhi.

Other stories by Shivangi Saxena