அரசுகளின் இரட்டை நிலை

2021-03-26@ 01:16:12

இடஒதுக்கீடு விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகளின் இரட்டை வேடம், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது. கடந்த பிப். 26ம் தேதி தமிழக சட்டப் பேரவையின் கடைசி கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அரசு கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான உள் இட ஒதுக்கீடான 20 சதவீதம் மூன்றாக பிரிக்கப்பட்டது. இதில் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7%, எஞ்சிய பிரிவினருக்கு 2.5% என, உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி முடிவாவதற்கு முன்பாக பாமக தரப்பில் எழுப்பப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலே, இந்த அறிவிப்பு வெளியானதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் பாமக தரப்பினர் திருப்தி அடைந்தாலும், தென்மாவட்டங்களில் தினமும் பிரச்னை எதிரொலித்த வண்ணம் உள்ளது.

68 உள்பிரிவுகளை உள்ளடக்கிய சீர்மரபினர் சமூக மக்கள், டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்கக்கோரி பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்கள் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கிய அரசின் முடிவை ஏற்கவில்லை. குறிப்பாக, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இந்த பிரச்னை வலுத்து வருகிறது. வாக்காளர்கள் காலில் விழுந்து, ‘‘அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்’’ என பிரசாரம் செய்து வருகின்றனர். போடியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு இது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பிரசாரத்திற்கு செல்லுமிடம் எல்லாம் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஓபிஎஸ் போடியில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் பிரசாரம் செய்தபோது, ஒரு சமூகத்தை சேர்ந்த எதிர்க்கட்சியினர், ஓபிஎஸ், அவரது இளைய மகனை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை விவகாரமும் ஒரு பிரிவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினமும், மதுரை மாவட்டத்தில் நேற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தின்போது எதிர்ப்பு கோஷம், சீர்மரபினர் தரப்பில் கருப்புக்கொடி காட்ட முயன்றது உள்ளிட்ட விவகாரங்களால் அதிமுக கூட்டணி அதிர்ச்சி அடைந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை திருமங்கலம் தொகுதியில் பிரசாரம் செய்த அமைச்சர் உதயகுமார், 6 மாத தற்காலிக மசோதாவாக இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது 6 மாதம் மட்டும் தற்காலிகமாக செயல்படும் என முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளதாக கூறியது வட மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

திமுக ஆட்சிக்கு வந்ததும், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து முந்திக் கொண்ட அதிமுக அரசு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், இவ்விவகாரத்தில் மத்திய பாஜ அரசு எதிர்க்கும் நிலை உள்ளது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு விவகாரத்தை விரும்பவில்லை என்பதை பட்டவர்த்தனமாகவே வெளிப்படுத்தி உள்ளது. இப்படி முன்னுக்குப் பின் முரணாக இரட்டை நிலையில் செயல்படும் அதிமுக கூட்டணிக்கு, வரும் தேர்தலில் சரியான பதிலடி வழங்க தமிழக மக்கள் காத்திருக்கின்றனர்.

Tags:

தலையங்கம்