அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கான நேர்முகத் தேர்வு,சென்னை,கவர்னர் மாளிகையில், நேற்று நடந்தது. இதில், புதிய துணை வேந்தராக, எம்.கே.சூரப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.
சூரப்பா, துணை வேந்தர் பதவியில், மூன்று ஆண்டுகள் இருப்பார். பெங்களூருவை சேர்ந்த இவர், ஐ.ஐ.டி., இயக்குனராக, ஆறு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பேராசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். 150க்கும் மேற்பட்ட, ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். நான்கு கண்டுபிடிப்புகளுக்கு, காப்புரிமை பெற்றுள்ளார்.
அண்ணா பல்கலையில், மே, 2016 முதல், துணைவேந்தர் பணியிடம் காலி. இரண்டு
தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டும், துணை வேந்தர் தேர்வு செய்யப்படவில்லை. 2017 நவம்பரில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர், ஞானமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சுந்தரதேவன் ஆகியோர் அடங்கிய, மூன்றாவது குழு அமைக்கப்பட்டது.
இந்தக்குழுவினர், பிப்., 2 வரை விண்ணப்பங்கள் பெற்றனர். பின், கல்வித்தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த, எட்டு பேரிடமும், மார்ச், 31ல், தேடல் குழுவினர், நேர்முக தேர்வு நடத்தினர்.அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, மூன்று பேர் பட்டியல், கவர்னரிடம் வழங்கப்பட்டது.
அதில், சென்னை ஐ.ஐ.டி.,யின், ஓய்வு பெற்ற கணித பேராசிரியர், பொன்னுசாமி; சென்னை பல்கலையின், முன்னாள் பேராசிரியர், தேவராஜ் மற்றும் பெங்களூரு, இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர், எம்.கே.சூரப்பா ஆகிய, மூன்று பேர் இடம்பெற்றனர். அவர்களுக்குநேற்று கவர்னர் மாளிகையில், நேர்முகத் தேர்வு நடந்தது.
இதில், சூரப்பாவை,புதிய துணை வேந்தராக, கவர்னர் பன்வாரிலால்புரோஹித் தேர்வு செய்தார்.
இதற்கிடையில், கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியரை, நேர்முக தேர்வுக்கு அழைத்ததும், அவரை, துணை வேந்தராக நியமித்ததும், திடீர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காவிரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நேரத்தில், தமிழகத்தை சேர்ந்த முக்கியமான பல்கலையின், துணை வேந்தர் பதவிக்கு, பெங்களூருவை சேர்ந்த பேராசிரியர், எம்.கே.சூரப்பா பெயரை பரிந்துரைக்கலாமா என,பா.ம.க., உள்ளிட்டசில கட்சிகள்,போர்க்கொடி துாக்கி உள்ளன.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து