திருச்சி : ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழகம் அமைதியான முறையில் ஒத்துழைக்க மறுக்கும்,'' என, 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
கமல் பேசியதாவது: ஆடு தாண்டும் காவிரி, அகண்ட காவிரியாக மாறுவது திருச்சியில் தான். காலங்காலமாக நமக்குள்ள உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிப்பறிக்கின்றனர். இது இன்று நடந்தது அல்ல; 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் பிரச்னை. கடந்த, 25 - 30 ஆண்டுகளுக்கும் மேலாக குழப்பம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
தற்போது தீர்வு கிடைக்கும் சந்தர்ப்பத்தில், சட்ட நுணுக்கங்களை பேசி, 'ஸ்கீம்' என்றால் என்ன என, பேசி, நேர விரயம் செய்வது ஒரு சூழ்ச்சி. மாநில அரசை குற்றம் சாட்டுகிறீர்கள்; மத்திய அரசை குற்றம் சாட்டுவதில்லை என்கின்றனர். மத்திய அரசு செய்வது தவறு. இதற்கு மேல் பேசினால், அது அவமரியாதை. மக்கள் நீதி மையம் அதை ஒரு போதும் செய்யாது.
திசை திருப்பாதீர்:
'வெள்ளையனே வெளியேறு' என்றால் போதுமானது. 'டேய் வெள்ளைக்கார நாயே' என்று சொல்லத் தேவையில்லை. வீழ்ந்து, மாண்டு போன நம் அரசியல் மாண்பை மீட்டெடுக்கும் முன்னுதாரணமாக மக்கள் நீதி மையம் அமைய வேண்டும் என்பது கனவு. அதை நனவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். திசை திருப்பாதீர்கள். திசை திரும்ப மாட்டோம். எத்தனை கலவரங்களை ஏற்படுத்தி, திசை திருப்ப முயன்றாலும், அமைதியாக எதிர்கொண்டு மீண்டும் கோரிக்கையை வைப்போம். உறங்குபவர்களை தட்டி எழுப்பலாம். நடிப்பவர்களை எழுப்ப முடியாது. சுதந்திரத்துக்காக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்பட்டது.
நீர்வளம் பாதுகாப்போம்:
நிகழ்ச்சியில் தொண்டர்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த பதில்கள்:
நடிப்பில் நீங்கள் சிறந்து விளங்கலாம், அரசியலில் முடியாது என்கிறார் ஒரு அமைச்சர்?
என்னிடம் சம்பளம் வாங்காமல், அவரது கட்சியில் எனக்காக கொள்கை பரப்பு செயலராக இருக்கிறார். அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள். ஆனால் அவர் அளவுக்கு கூட, என்னால் நடிக்க முடியாது. நான் சினிமாவில் அரசியல் செய்யவில்லை. அதே போல அரசியலில் நடிக்க மாட்டேன். அமைச்சரால் அது முடியுமா.
நீங்கள் வந்தபின் வைகை எக்ஸ்பிரஸ், நம்மவர் எக்ஸ்பிரஸ் என மாறிவிட்டது. ஏன் திடீர் ரயில் பயணம்?
நான் பல ஆண்டுகளாக ரயிலில் சென்று வருகிறேன். நாங்கள் 48 பேர் வந்தோம், அதிக வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்காக அதிக காவலர்களை வீணடிக்கக் கூடாது என்பதே இப்பயணத்தின் நோக்கம்.
எஸ்.சி., / எஸ்.டி., சட்டம் தொடர்பான கலவரம் பற்றிய உங்கள் கருத்து?
அவர்களிடம், சகோரதரத்துவமாக பழகும் வரை அந்தச் சடட்டங்கள் இருக்க வேண்டும்.
திருச்சி கூட்டத்தின் பெயரை, 'காவிரிக்காகக் கண்டனப் பொதுக்கூட்டம்' என்று கமல் மாற்றினார். ''மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் இனி தொண்டர்களே கொடி ஏற்றுவார்கள்' என, குறிப்பிட்டார். இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் சஜீனா கட்சி கொடியை ஏற்றினார். கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கமல், மரக்கன்றுகளை வழங்கினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து