ஜோத்பூர் : ராஜஸ்தானில், மான் வேட்டையாடிய வழக்கில், பாலிவுட் நடிகர், சல்மான் கானுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து, ஜோத்பூர் சிறையில், அவர் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, தபு உள்ளிட்ட மூன்று நடிகையர், விடுதலை செய்யப்பட்டனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர், சல்மான் கான், 52. மைனே பியார் கியா, ஹம் ஆப்கே ஹைன் கோன் உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்; இவர், 1998ம் ஆண்டு, அக்., 1ல், ஹம் சாத் சாத் ஹெயின் என்ற படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சென்றார்.
தப்பினார்:
அன்று இரவு, மான் வேட்டையாடுவதற்காக, அருகிலிருந்த கங்கனி கிராமத்தை ஒட்டிய வனப் பகுதிக்கு, காரில் சென்றார். அவருடன், நடிகர் சயீப் அலிகான், நடிகையர், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரும் சென்றனர். அப்போது, அங்கு சுற்றித் திரிந்த, 'பிளாக் பக்' எனப்படும், அரிய வகையைச் சேர்ந்த இரண்டு மான்களை, சல்மான் துப்பாக்கியால் சுட்டார்; இதில், குண்டு பாய்ந்து, அந்த மான்கள் இறந்தன.
துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டு, அந்த கிராமத்தைச் சேர்ந்த, 'பிஷ்னோய்' இன மக்கள் விரைந்து வந்தனர். மான்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், சல்மான் ஓட்டிச் சென்ற காரை விரட்டிச் சென்றனர். எனினும், சல்மான் தப்பினார்.
இதன்பின், மான்களின் உடல்களுடன், வனத்துறை அதிகாரிகளிடமும், போலீசாரிடமும், கிராம மக்கள் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி,
சல்மான், சயீப் அலிகான், தபு, சோனாலி, நீலம் ஆகியோர் மீது, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஜோத்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது, நடிகர் சல்மான், 'மான்களை சுடவில்லை. புதரில் சிக்கியிருந்த மான்களை காப்பாற்ற முயற்சித்தேன்' என்றார்.
இந்த வழக்கில், சல்மானுக்கு எதிராக, கிராம மக்கள், 28 பேர் சாட்சி அளித்தனர். 20 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், இருதரப்பு வாதங்கள், மார்ச், 28ம் தேதியுடன் முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி, சல்மான் உள்ளிட்ட நடிகர் - நடிகையர், நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மாஜிஸ்திரேட், தேவ் குமார் கத்ரி, ''மான் வேட்டையாடிய வழக்கில், நடிகர் சல்மான் கான், குற்றவாளி,'' என, தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றவர்களை விடுதலை செய்தார். குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, சல்மானுக்கான தண்டனை குறித்த விசாரணை, நேற்று மதியம் நடந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மான்களை வேட்டையாடுவதை ஒரு வழக்கமாகவே, சல்மான் வைத்துள்ளார்; அதனால், இந்த வழக்கில் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்' என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, சல்மான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இதே போன்ற வேறு இரு வழக்குகளில், சல்மானை, நீதிமன்றங்கள் விடுதலை செய்துள்ளன. பல ஆண்டுகளாக, சமூக சேவை செய்து வரும் சல்மானுக்கு, கருணை காட்ட வேண்டும்' என்றார்.
இதன்பின், நடிகர் சல்மானுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார். சல்மானுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டு, நீதிமன்றத்தில், பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த அவரது சகோதரிகள், அல்விரா, அர்பிதா கதறி அழுதனர்.
இன்று விசாரணை:
ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, ஜோத்பூர் சிறையில், சல்மான் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்தும், ஜாமின் கோரியும், ஜோத்பூர் செஷன்ஸ் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனு, இன்று விசாரணைக்கு வரவுள்ளதாகவும், சல்மான் கானின் வழக்கறிஞர், தேசாய் தெரிவித்துள்ளார்.
சல்மான் சுட்டுக் கொன்ற மான்கள், மிகவும் அரிய வகையைச் சேர்ந்தவை. ஜோத்பூரை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும், 'பிஷ்னோய்' இன மக்கள், இயற்கையை வழிபடுகின்றனர். 'பிளாக் பக்' மான்களை தெய்வமாகவே பார்க்கின்றனர். அதனால், வனவிலங்குகளை கொல்வதை, இவர்களால் சகிக்க முடியாது. அதுவே, சல்மானுக்கு எதிராக, இவர்கள் சாட்சியம் அளித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
திரைப்படம், 'டிவி' நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடிப்பதற்காக, 1,480 கோடி ரூபாய்க்கு, சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது, எட்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது தவிர, 'டிவி' நிகழ்ச்சிகள், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சல்மானுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையால், இந்த படங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாலிவுட் மற்றும் 'டிவி' நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு, 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
சல்மான் சந்தித்த வழக்குகள்:
* அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை, உரிமம் இன்றி பயன்படுத்தி, மான்களை வேட்டையாடியதாக, சல்மான் மீது, 1998ல், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், 2017ல், அவர் விடுதலை செய்யப்பட்டார்.
* ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில், 1998ல், 'சின்காரா' இன மான்களை வேட்டையாடி கொன்றதாக, சல்மான் மீது, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில், அவருக்கு, 17 மாதம் சிறை தண்டனை விதித்து, விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், சல்மானை விடுதலை செய்தது.
* மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2002ல், நடைபாதையில் துாங்கியவர்கள் மீது, போதையில் காரை ஏற்றிய வழக்கில், ஒருவர் இறந்தார். இந்த வழக்கில், 'சல்மான் கான் குற்றவாளி' என, விசாரணை நீதிமன்றம் அறிவித்தது. மும்பை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து