சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்தபடி, தமிழகம் முழுவதும், வியாபாரிகள் நேற்று, கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால், சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
வெறிச்சோடியது:
அதேபோல, எப்போதும் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும், தி.நகர் பகுதியும், கடையடைப்பால் வெறிச்சோடியது. மற்ற மாவட்டங்களிலும், கடைகள் மூடப்பட்டு இருந்தன; மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. குடியிருப்பு பகுதிகளில் மட்டும், சில கடைகள் திறந்திருந்தன.
இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், விக்கிரமராஜா கூறியதாவது: கடையடைப்பு போராட்டம், 100 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும், 21 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காவிரி பிரச்னையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், வியாபாரிகள் கடை அடைப்பு செய்துள்ளனர்.
ஒத்துழைப்பு:
ஓட்டல்கள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம், காய்கனி வியாபாரிகள் சங்கம், ஜவுளி, நகைக்கடை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்து, கடைஅடைப்பில் பங்கேற்றன. போராட்டம் வெற்றி பெற ஒத்துழைத்த வணிகர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து