சென்னை : 'துரோகத்திற்கு துணை போன, அ.தி.மு.க., வின் உண்மை முகம், அவர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் வெளிப்பட்டுள்ளது' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது நேற்றைய அறிக்கை: மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து, உண்ணாவிரதம் இருந்த, அ.தி.மு.க.,வினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், துரோகம் செய்துள்ள, பிரதமர் மோடி அரசை கண்டித்து பேச துணியவில்லை. மாறாக, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளை குறிவைத்து, விமர்சித்து, திசை திருப்பும், கீழ்த்தரமான அரசியல் செய்துள்ளனர்.
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள, அ.தி.மு.க.,வினர், பார்லிமென்டில், தங்களுக்கு இருக்கிற பெரும்பான்மையை, தமிழகத்தின் நலனுக்கு பயன்படுத்தாமல், பா.ஜ., துரோகத்திற்கு துணை நின்று வருகின்றனர்.
பா.ஜ., துரோகத்தை கண்டித்து, மென்மையாக கூட, எதையும் பேசும் திராணியில்லாத, அ.தி.மு.க.,வினர், கன்னியாகுமரி முதல் சென்னை வரை, தி.மு.க.,வை விமர்சித்து, தங்கள் உண்மை முகத்தை காட்டியுள்ளனர்.
'நாங்களும் போராடினோம்' என, மக்களை ஏமாற்ற, அ.தி.மு.க., போட்ட நாடகத்தால், மக்கள் மன்றத்தில், அவர்களின் முகத்திரை கிழிந்து, அவமானத்திற்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
கலவர பூமியாகும் வட மாநிலங்கள்:
'மத்திய அரசின் அலட்சியத்தால், வட மாநிலங்கள் கலவர பூமியாக மாறுவது பெரும் கவலையளிக்கிறது' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: வட மாநிலங்களில், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வரும், ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான, கண்மூடித்தனமான வன்முறை கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் அலட்சியத்தால், வட மாநிலங்கள் கலவர பூமியாக மாறி வருவது பெரும் கவலை அளிக்கிறது.
ஆதிதிராவிடர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், மத்திய அரசு, போதிய ஆர்வத்துடன் வாதிட தவறிவிட்டது. சட்ட விதிகளில் மட்டும், சில திருத்தங்களை செய்தது, அடிப்படை நோக்கத்தை சிதைத்துள்ளது.
ஒரு சட்டம், சில நேரங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக, ஆதிதிராவிட சமுதாயத்தின் தன்மான பாதுகாப்புக்கான சட்டங்களின் கூர்மையை குறைக்க வேண்டும் என்பது சரியல்ல. இந்த நிலை தொடர்ந்தால், நாட்டில் உள்ள அனைத்துச் சட்டங்களுக்கும், இந்த மாதிரியான நிலை ஏற்படும் என்பதை, மத்திய அரசு, கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து