சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசை கண்டித்து, அ.தி.மு.க., நேற்று நடத்திய உண்ணாவிரதம், அறவழியில் நடந்த வெற்றிகரமான போராட்டமாக அமைந்தது. தமிழகம் முழுவதும், அமைச்சர்கள் தலைமையில், ஆளும் கட்சியினர், எட்டு மணி நேரம், உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், முன்னறிவிப்பின்றி பங்கேற்ற, முதல்வர் பழனிசாமி, 'தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் போனதற்கு, தி.மு.க.,வே காரணம்' என, கடுமையாக சாடினார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், நேற்று மாவட்ட தலைநகரங்களில், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரதத்திற்கு, அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தலைமை வகித்தனர். சென்னை, சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரதத்திற்கு, அமைச்சர் ஜெயகுமார் தலைமை வகித்தார். ஆனால், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர், பன்னீர்செல்வமும், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், இப்போராட்டத்தில் பங்கேற்றனர். கட்சியினருடன் சேர்ந்து, எட்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தனர்.
துரோகம்:
மாலை, 5:00 மணி அளவில், உண்ணாவிரத பந்தலில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: நம் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக, உண்ணாவிரதம் நடத்தி உள்ளோம். காலை, 8:00 மணிக்கு, உண்ணாவிரதத்தை துவக்கினோம். அப்போதிலிருந்து, அமர்ந்த இடத்திலிருந்து, நகராமல் இருந்தோம்.
காவிரி பிரச்னை, டெல்டா விவசாயிகளோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வோடும் பின்னி பிணைந்துள்ளது.
மைசூரு அரசுடன், 1924ல், போடப்பட்ட ஒப்பந்தத்தை, 1974ல், புதுப்பித்திருக்க வேண்டும். அப்போது, ஆட்சியில் இருந்த, தி.மு.க., அதை செய்திருந்தால், இத்தனை ஆண்டு காலம், நாம் போராட வேண்டியிருக்காது. சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து, ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், விவசாயிகளுக்கு, தி.மு.க., துரோகம் செய்தது.
'ஆறு வாரத்திற்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என, பிப்., 16ல், மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய அரசு, அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, மத்திய அரசை கண்டித்து, உண்ணாவிரதம் இருக்கிறோம்.
நம் கட்சி, எம்.பி.,க்கள் தொடர்ந்து, 19 நாட்களாக, பார்லிமென்டை முடக்கி உள்ளனர். எந்த அளவுக்கு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். ஏப்., 2ல், மத்திய அரசு மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். காவிரி நீர் பிரச்னைக்காக, ஜெ., எந்த அளவுக்கு போராட்டம் நடத்தினாரோ, அதே அளவுக்கு, இந்த அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதி, 'உங்களுக்கு கிடைக்க வேண்டிய நீர், நிச்சயம் கிடைக்கும்' என, உறுதி அளித்துள்ளார். நாம் கபட நாடகமாடுவதாக, ஸ்டாலின் கூறுகிறார். 1974ல், தி.மு.க., தான் கபட நாடக கதாநாயகனாக இருந்தது. அவர்கள், மத்திய ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசை நிர்பந்தப்படுத்தி, காவிரி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்; அதை, அவர்கள் செய்யவில்லை. சந்தர்ப்பத்தை தவற விட்டு, தமிழகத்திற்கு துரோகம் செய்தனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.
கபட நாடகம்:
துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேசியதாவது: காவிரி நடுவர் மன்றம், 2007ல், இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போது, தி.மு.க., ஆட்சி நடந்தது; மத்திய கூட்டணி அரசிலும் இடம் பெற்றிருந்தது. அப்போது, ஜெயலலிதா, 'காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை,
அரசிதழில் வெளியிடச் செய்யுங்கள்' என, முதல்வராக இருந்த, கருணாநிதியிடம் கூறினார்; அவர் செவி சாய்க்கவில்லை. இதற்காக, ஜெ., உண்ணாவிரதம் இருந்தார்.
மீண்டும், ஜெ., முதல்வரானதும், சட்டப் போராட்டம் நடத்தி, 2013ல், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தார். இதை, தமிழக மக்கள் மறந்து விடுவர் என நினைத்து, தி.மு.க.,வும் காங்கிரசும், கபட நாடகம் நடத்துகின்றன. காவிரி பிரச்னையில், அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றன. காவிரியில், ராஜ துரோகம் செய்தது, தி.மு.க., தான். அவர்களால் தான், இந்த அளவுக்கு பிரச்னை வந்தது.
தற்போது கூட, 'இப்பிரச்னையை, ஒன்றாக இருந்து அணுகுவோம்' என, சட்டசபையில் தெரிவித்தேன். தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் முந்திக்கொண்டு, அரசியல் லாபம் தேட, போராட்டம் என, மக்களை திசை திருப்புகிறார். நாம், நம் நிலையில் தெளிவாக உள்ளோம். எந்த சூழ்நிலையிலும், தமிழகத்தின் ஜீவாதார உரிமையை, ஜெ., விட்டு கொடுக்கவில்லை. அவரது வழியில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் வரை, எங்களின் அறவழிப் போராட்டம் தொடரும். இவ்வாறு பன்னீர் செல்வம் பேசினார்.
உண்ணாவிரதத்திற்கு, தலைமை ஏற்போர் பட்டியலை, அ.தி.மு.க., தலைமை வெளியிட்டது. அதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் ஆகியோரது பெயர் இல்லை. நேற்று இருவரும், சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். இது குறித்த தகவலை, இருவரும் ரகசியமாக வைத்திருந்தனர். நேற்று காலை, 8:05 மணிக்கு, முதல்வர் பழனிசாமி வந்தார். காலை, 8:15 மணிக்கு, துணை முதல்வர் வந்தார். அதன் பிறகே, அமைச்சர் ஜெயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஓடி வந்தனர். முதல்வர் வரும் விபரம், போலீசாருக்கு தெரிவிக்கப்படாததால், வழிநெடுகிலும் பாதுகாப்பு போடப்படவில்லை.
உண்ணாவிரதத்தில், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் தகவல் இல்லாததால், அ.தி.மு.க.,வினர், பெரிய அளவில் ஏற்பாடு செய்யவில்லை. அவர்கள், திடீரென வந்ததும், கட்சியினர் திரண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து, கூடுதலாக பந்தல் போடப்பட்டது. உண்ணாவிரதத்தில், மதியம் வரை யாரும் பேசவில்லை. அப்போது, திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை' என்ற, எம்.ஜி.ஆர்., பாடல் ஒலிபரப்பானதும், பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, அந்தப் பாடலை நிறுத்திவிட்டு, வேறு பாடலை ஒலிபரப்பினர். உண்ணாவிரதம் நடந்த பகுதியில், மோர், ஜூஸ், சமோசா, சுண்டல், மாங்காய், வெள்ளரி விற்பனை, அமோகமாக நடந்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (7+ 123)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply