தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க., சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் உண்ணாவிரதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில், மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை, 8:00 முதல் மாலை 5:00 வரை, உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
அமைச்சர்கள் அனைவரும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் மட்டும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. தினகரன் அணியினர் தஞ்சாவூரில் உண்ணாவிரதம் நடத்தினர்.
இதையடுத்து ஆளும் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. ஜெ., மறைவுக்கு பின் ஒன்றுபட்ட அ.தி.மு.க., சார்பில் நடக்கும் முதல் போராட்டம் இது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகப்பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த வேண்டும் என கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்பதால் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் இன்று மாலை சென்னையில் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க இருவரும் செல்வர் என கூறப்படுகிறது.
ஸ்டாலின் கோரிக்கை: வணிகர்கள் நிராகரிப்பு:
தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டில் நேற்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், விக்கிரமராஜா சந்தித்து பேசினார்.
பின் அவர் கூறியதாவது: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, திட்டமிட்டப்படி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும். ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு '5ம் தேதி நடக்கும் பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தருவது பற்றி பரிசீலிக்க வேண்டும்' என கேட்டார்.
அதன் அடிப்படையில் அவரை நான் சந்தித்து எங்களது நிலைப்பாட்டை விளக்கினேன். காவிரி பிரச்னைக்காக இன்று கடையடைப்பு நடத்தப் போவதாக மார்ச் 29ம் தேதியே முடிவெடுத்து அனைத்து வியாபாரிகளுக்கும் தெரிவித்து விட்டேன்; இனி மாற்ற இயலாது. எனவே எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி வேண்டினேன். வியாபாரிகளை தொந்தரவு செய்யக் கூடாது என வலியுறுத்தினேன். அதற்கு ஸ்டாலின், 'எல்லாரும் காவிரி பிரச்னைக்காகத் தான் போராடுகிறோம். உங்களது போராட்டத்திற்கு ஆதரவு உண்டு' என்றார்.
மேலும் 5ம் தேதி தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு வியாபாரிகளின் ஆதரவை
கேட்டார். இது குறித்து ஆலோசித்து இன்று மாலை எங்கள் முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி கூறுகையில், ''பெட்ரோல் பங்குகள் இன்று வழக்கம் போல செயல்படும்; வரும் 5ம் தேதி தமிழகத்தில் 'பந்த்' அறிவிக்கப்பட்டு உள்ளதால், அன்றைய தினம் எடுக்க வேண்டிய முடிவு தொடர்பாக சங்க நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும்,'' என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும், உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பஸ்களின் இயக்கத்தில் பாதிப்பு வருமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், 'போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் எதையும் அறிவிக்கவில்லை. எனவே பஸ்கள் இன்று வழக்கம் போல இயங்கும்' என அரசு போக்குவரத்து கழகங்கள் தெரிவித்துள்ளன.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (3)
Reply
Reply
Reply