புதுடில்லி : எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் தொடர்பாக, சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மறு சீராய்வு மனுவை விரிவாக பரிசீலிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.சி., எனப்படும் தலித், எஸ்.டி., எனப்படும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகளை தடுக்க, எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமீபத்தில், ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதில் கூறப்பட்டிருந்ததாவது: எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டால், விசாரணை இன்றி உடனடியாக யாரையும் கைது செய்யக்கூடாது; அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரி தீவிர விசாரணை நடத்திய பின், அவர் ஒப்புதலுக்கு பின்பே கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
பதற்றம்:
இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான விதிகளையும், தன் உத்தரவில்,
உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முன்தினம், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல நகரங்களில் ரயில், பஸ் போக்குவரத்து முடங்கியது; கடைகள் அடைக்கப் பட்டிருந்தன.
ம.பி., மஹாராஷ்டிரா, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில், போராட்டக்காரர்கள் மீது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம்அடைந்தனர். இதனால், அப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
மறுசீராய்வு:
இதற்கிடையே, எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதிக்கக் கோரி, மத்திய அரசு, மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.கோயல், யு.யு.லலித் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தங்கள் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: எஸ்.சி., - எஸ்.டி., சட்டம் நீர்த்துப் போகும் வகையில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அப்பாவிகளை தவறாக தண்டிக்கக்கூடாது என்ற எண்ணத்தில், அவர்ளை பாதுகாக்கும் வகையில் தான் உத்தரவை பிறப்பித்தோம்.
முடியாது:
எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தை பயன்படுத்தி, யாரையும் அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது. பிரதான வழக்கில் மனுதாரர்களாக
உள்ளோரின் வழக்குகளோடு, மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள மனுவையும் விரிவாக விசாரிப்போம். 10 நாட்களுக்கு பின், இந்த வழக்கு விசாரிக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக, மஹாராஷ்டிரா அரசு உள்ளிட்ட பிரதான மனுதாரர்கள், இரு நாட்களில், தங்கள் தரப்பு வாதங்களை எழுத்து மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
எஸ்.சி., - எஸ்.டி., சட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், லோக்சபாவில் நேற்று கூறியதாவது: எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்; இந்த உத்தரவுக்கு, மத்திய அரசு பொறுப்பல்ல. பிற்பட்ட சமுதாய மக்களின் நலன்களை பாதுகாப்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தால் வன்முறை ஏற்படாமல் அமைதி நிலவ, மக்கள் உதவ வேண்டும். நாடு முழுவதும் நல்லிணக்கம் ஏற்பட, மக்களின் ஒத்துழைப்பை கோருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (16+ 16)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply