சி.பி.எஸ்.இ., பொது தேர்வில், கணிதம், பொருளாதாரம் வினாத்தாள்களை தொடர்ந்து, அரசியல் அறிவியல், சமஸ்கிருதம் பாடங்களுக்கான வினாத்தாள்களும், 'லீக்' ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வெளியான வினாத்தாள்கள், போலியானவை என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பொது தேர்வில், இந்த ஆண்டு வினாத்தாள் லீக் ஆகி, பல்வேறு பிரச்னைகள்
எழுந்துள்ளன. பிளஸ் 2 பொருளாதாரம் மற்றும், 10ம் வகுப்புக்கான கணித தேர்வில், வினாத்தாள் லீக் ஆனது குறித்து, டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். பிளஸ் 2 பொருளாதாரம் பாடத்திற்கு மட்டும், வரும், 25ல் மறுதேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கான கணித தேர்வு நடத்துவது குறித்து, 15 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பொது தேர்வில், இந்த வாரம் நடக்கவுள்ள, அரசியல் அறிவியல் மற்றும் சமஸ்கிருதம் பாடங்களுக்கான வினாத்தாள்களும், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. அவை, 'வீடியோ' வடிவில் வெளியாகி உள்ளன. இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேநேரத்தில், வினாத்தாள்கள் வெளியான தகவலை, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் மறுத்துள்ளது. 'சமூக வலைதளங்களில் வெளியான, அரசியல் அறிவியல், சமஸ்கிருதம் வினாத்தாள்கள், முந்தைய தேர்வுகளில் இடம் பெற்றவை; போலியானவை. மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம்' என, தெரிவித்துள்ளது.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து