கோவை : கோவை மாவட்டம், பூண்டி அருகே, ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்ட, 112 அடி பிரமாண்ட ஆதியோகி சிலையை, கடந்தாண்டு, பிப்., மாதம், மகாசிவராத்திரியன்று, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
உலகின் மிகப்பெரிய மார்பளவு சிலை என, கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும், இந்த சிலை இடம் பெற்றுள்ளது. இந்த சிலையை, அதிகாரப்பூர்வ சுற்றுலாத்தலமாக மத்திய சுற்றுலாத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
தற்போது, 'இன்கிரெடிபிள் இந்தியா' எனப்படும், வியத்தகு இந்தியாவின், பிரபல சுற்றுலாத் தலங்களின் பட்டியலில், இந்த சிலை சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஈஷா யோகா நிறுவனர், சத்குரு கூறியதாவது: இச்சிலை, ஈஷா அறக்கட்டளை தன்னார்வலர்களால், எட்டு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. ஆதியோகியின் திருமுகம், ஒரே சமயத்தில், நிச்சலனம், உயிர்த்துடிப்பு, பரவசத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
யோகத்தின் மூலமே ஆதியோகி. தோராயமாக, 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மதங்கள் அனைத்தும் தோன்றுவதற்கு முன், முதன்முதலாக யோகா அறிவியலை, தன் ஏழு சீடர்களான, சப்தரிஷிகளுக்கு பரிமாறிய முதல் யோகி, ஆதியோகி.
மனிதர்கள் எல்லைகளைக் கடந்து உச்ச நிலை யை அடைய, 112 வழிமுறைகளை வழங்கியவர். இதை சிறப்பிக்கவே இச்சிலை, 112 அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. யோகா அறிவியலின் மூலம் தன்னிலை மாற்றம் உருவாக்குவதற்கான உந்துசக்தியாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து