புதுடில்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, 9ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் சிரமங்களை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ள நீதிமன்றம், தங்கள் தீர்ப்பில் வாரியம் அமைக்கும்படி கூறப்பட்டதா என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை, முறையே 404.25 டி.எம்.சி., 284.75 டி.எம்.சி., 30 டி.எம்.சி., மற்றும் 7 டி.எம்.சி., என பிரித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிலிகுண்டுலு அணையிலிருந்து 177.25 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். இந்த பங்கீட்டை முறையாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு, ஆறு வாரத்திற்குள் 'ஸ்கீம்' உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் ஆறு வாரங்கள் முடிந்த பின்னும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மாறாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், மேலும் மூன்று மாத அவகாசம் கேட்டும், மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று தெரிவித்தது.
நீதிபதிகள் கூறியதாவது: காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் இடம்பெற்றிருந்த, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு வாரியம் என்பது மட்டுமே அர்த்தம் அல்ல; இப்பிரச்னையை பல கோணங்களில் தீர்க்கும் வகையில் முந்தைய உத்தரவு அமைந்திருந்தது.
காவிரி நதி நீர் தமிழகத்துக்கு கிடைக்காததால் ஏற்பட்டுள்ள சிரமங்களை நீதிமன்றம் புரிந்து வைத்துள்ளது. இந்த பிரச்னைக்கு தக்க தீர்வு காணப்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்வோம். இந்த வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதி நடக்கும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து