அ.தி.மு.க., - எம்.பி., முத்துக்கருப்பன் சமீபத்தில் டில்லியில் நிருபர்களை சந்தித்து, 'காவிரி விவகாரத்துக்காக ராஜினாமா செய்யப் போகிறேன். நான் திருநெல்வேலிக்காரன்; வார்த்தை மாற மாட்டேன். யார் சமாதானம் செய்தாலும் முடிவில் பின்வாங்க மாட்டேன்' என, கூறியிருந்தார்.
இதை நம்பி அவரது ராஜினாமா பற்றிய செய்திகள் 'டிவி' சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பாகின. இந்நிலையில் நேற்று காலை பார்லிமென்டிற்கு கிளம்பும் முன் செய்தியாளர்களை மீண்டும் அழைத்த முத்துக்கருப்பன், ''மக்களுக்காக இன்று என் பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என்றார்.
'காவிரி பிரச்னைக்காக வாழப்பாடி ராமமூர்த்திக்கு பின் முத்துக்கருப்பன் ராஜினாமா' என தமிழகமே பரபரக்க செய்தி வெளியானது. பேட்டியை முடித்ததும் நேராக ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ராஜினாமா கடிதத்தை நேரில் அளிக்கப் போவதாக கூறிவிட்டு கிளம்பினார். அடுத்த நிமிடமே 'டிவி' சேனல்களில், 'முத்துக்கருப்பன் ராஜினாமா கடிதத்தை அளித்தார்' என செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
என்ன தான் நடக்கிறது என்பதை அறிய பார்லிமென்டிற்குள் சென்று பார்த்தால் அங்கு முத்துக்கருப்பனும் வந்து சக, எம்.பி.,க்களுடன் சேர்ந்து கோஷம் போட்டார். 'ராஜினாமா செய்தவர் எப்படி சபைக்குள் வந்து கோஷம் போடுகிறார்' என குழப்பம் ஏற்பட்டது. அப்போது சபை ஒத்திவைக்கப்படவே சக எம்.பி.,க்கள் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
குழப்பம் அதிகமான நிலையில் முழு விபரத்தையும் விசாரித்த போது கடைசியில் நடந்ததே வேறு என்பது தெரியவந்தது. ராஜினாமா
கடிதத்துக்கு என ஒரு முறை உள்ளது. ஆனால் அதன்படி முத்துக்கருப்பன் கடிதம் இல்லை.அந்த கடிதம் தமிழில் எழுதப்பட்டிருந்தது. மேலும், 'பழனிசாமி, ஓ.பி.எஸ்., தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோரோடு இணைந்து போராடியும், காவிரி பிரச்னையில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதால் மன உளைச்சல் அதிகமாகி எம்.பி., பதவியை ராஜினாமா செய்கிறேன்' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்சி நிகழ்ச்சிக்கு அடிக்கப்படும் 'பிட்' நோட்டீஸ் போல இருந்த அந்த கடிதத்தை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அவர் அளிக்கவே இல்லை. ஆனால் கடிதம் அளிக்கப்பட்டு அது தமிழில் இருப்பதால், வெங்கையா நாயுடு அதை ஏற்க மறுத்துவிட்டதாக 'டிவி' சேனல்கள் செய்தி வெளியிட்ட உச்சக்கட்ட கூத்தும் நடந்தது.
காவிரி விஷயத்துக்காக பார்லிமென்டில் அ.தி.மு.க., கிளப்பும் வெற்று முழக்கங்களும், வீண் நாடகங்களும் பார்ப்பவர்கள் மத்தியில் சிரிப்பு, அதிருப்தி, கோபம் ஆகியவற்றை ஏற்படுத்தி தற்போது எரிச்சல் என்ற கட்டத்தை எட்டியுள்ளது.
- நமது டில்லி நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து