புதுடில்லி : மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்திய, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், வினாத்தாள் வெளியான விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை மற்றும் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நாளை விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நம்பிக்கை:
ஹரியானாவை சேர்ந்த வழக்கறிஞர், அலேக் அலோக் ஸ்ரீவத்ஸ்வா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
வினாத்தாள் வெளியான விவகாரத்தால், மாணவர்கள் மத்தியில், இளம் வயதிலேயே கல்வி முறையின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வின், மற்ற கேள்வித் தாள்களும் இணையதளத்தில் வெளியாகி இருப்பதற்கு, வாய்ப்பு உள்ளது. எனவே, பிளஸ் 2 பொருளாதாரம் மட்டுமல்லாமல், அனைத்து பாடங்களுக்கும், நான்கு வாரங்களுக்குள் மறுதேர்வு நடத்த வேண்டும்.
இதனால், தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்புமிக்க நேரம் மற்றும் எதிர்கால வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படக்கூடும். தேர்வு எழுதிய மாணவர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதுவதால், உள்நாடு மற்றும் வெளிநாட்டு போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் நாட்களை தவிர்த்து, மறு தேர்வுக்கான தேதியை அறிவிக்க வேண்டும்.
மேலும், பிளஸ் 2 மறுதேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்படும், மன உளைச்சல் மற்றும் சிரமத்திற்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த, ரோஹன் மாத்யூ என்ற மாணவன், 'வினாத்தாள் வெளியானது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, மனு தாக்கல் செய்துள்ளான்.
விளக்கம்:
தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏப்.,4ல், இந்த மனுக்களை விசாரிப்பதாக தெரிவித்தது. இதற்கிடையே, வினாத்தாள்கள் வெளியானது தொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை செயலர், சி.பி.எஸ்.இ., தலைவர்,
டில்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு, தேசிய மனித உரிமை ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
பத்தாம் வகுப்பு, கணித பாடத்துக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில், இதற்கு மறு தேர்வு நடத்தப்படுமா, இல்லையா என அறிவிக்க, சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிடக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி, கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிட்டதாவது: ஜூலை மாதம் வரை மாணவர்களை ஏன் பதற்றத்துடன் காத்திருக்க வைக்கிறீர்கள். இந்த தாமதம், மாணவர்களின் ஒரு ஆண்டு கனவை வீணடிப்பதோடு, தலைமேல் தொங்கும் கத்தியை போல, அவர்களை மிரட்டும் என்பது தெரியாதா? எனவே, மறுதேர்வு தொடர்பாக விரைவில் முடிவெடுத்து, வரும்,16ல், அறிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து