முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், தி.மு.க.,வினர் நேற்று, திடீரென ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இதை கண்டித்து, மாநிலம் முழுவதும், ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி ஆலோசிக்க, தி.மு.க., சார்பில், நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
சென்னை, அறிவாலயத்தில் நடந்த இந்தக் கூட்டம் முடிந்ததும், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், திடீரென காரில் ஏறி, வள்ளுவர் கோட்டம் சென்றார். அதற்கு முன், வள்ளுவர் கோட்டத்திற்கு வெளியே உள்ள, திறந்தவெளி பூங்காவில், எம்.எல்.ஏ.,க்கள், அன்பழகன், சேகர்பாபு, முன்னாள் கவுன்சிலர், தனசேகரன் உள்ளிட்ட ஏராளமான, தி.மு.க.,வினர் குவிந்திருந்தனர்.
அவர்கள், போலீசாரின் அனுமதி பெறாமல், பூங்காவில் உள்ள, அண்ணாதுரை சிலை அருகே, திடீரென ஆர்ப்பாட்டத்திற்கான மேடை அமைத்தனர். ஸ்டாலின் அங்கு வந்ததும், அவருடன் சேர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசை கண்டித்து திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்; கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஸ்டாலின் பேசுகையில், ''வரும், 5ம் தேதி, முழு அடைப்பு போராட்டம் நடப்பதால், போக்குவரத்து நிறுத்தப்படும்; ரயில் மறியலும் நடக்கும். ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, முன் அறிவிப்பில்லாத தொடர் போராட்டங்கள் நடத்தப்படும், இந்த போராட்டத்திற்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.
ஸ்டாலின் கைது:
மேலும், முன்னறிவிப்பு இன்றி, ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும், தி.மு.க., தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களை, பஸ்களில் ஏற்றி, தி.நகரில் உள்ள, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்; மாலையில், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கனிமொழி கைது:
இதையறிந்து, நெல்லை சுற்றுப்பயணத்தில் இருந்த, கனிமொழி, எம்.பி., நேற்று மதியம், 1:00 மணிக்கு நெல்லை ஜங்ஷனில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். அவருடன், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மைதீன்கான், லட்சுமணன் உட்பட, 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
5ம் தேதி, 'பந்த்' நடத்த முடிவு:
சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., சார்பில், நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழக, காங்., தலைவர், திருநாவுக்கரசர், ம.தி.மு.க., பொருளாளர், கணேசமூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், காதர்மொய்தீன் உட்பட, முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும், ஸ்டாலின் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசை கண்டித்து, வரும், 5ம் தேதி, தமிழகம் முழுவதும், முழு அடைப்பு போராட்டம் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, அனைத்து கட்சி தலைவர்களுடன் இணைந்து, டெல்டா பகுதியில் இருந்து, காவிரி உரிமை மீட்பு பேரணி, விழிப்புணர்வு பயணம் செல்ல முடிவு செய்துள்ளோம்.
எந்த தேதியில், எந்த இடத்திலிருந்து பேரணி துவங்கும் என்பது குறித்து, அனைத்து கட்சித் தலைவர்களுடன் பேசி, முடிவு எடுக்கப்படும். பிரதமர், மத்திய அமைச்சர் என, தமிழகத்திற்கு யார் வந்தாலும் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து