திருநெல்வேலி:நெல்லை மற்றும் கேரளத்தை இணைக்கும் இயற்கை எழில் மிக்க பாதையான ஆரியங்காவு குகை வழியாக எட்ட ஆண்டு களுக்குப் பிறகு நேற்று ரயில் இயக்கப்பட்டது.
தமிழக பகுதியில் கண்டுகொள்ளப்படாத இந்த ரயிலுக்கு, கேர-ள பகுதியில் எம்.பி., க்கள் தலைமையில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரளா புனலுார் வரை 49.5 கி.மீ., ரயில் வழித்தடம், ஆரியங்காவு குகைப்பாதை ஆகியவை 1873ல் துவங்கப்பட்டது. 1902ல் சரக்கு ரயில்களும், 1904 முதல் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டன.
தமிழகம், கேரளம் இரு மாநிலங்களின் போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இது இருந்தது.இதை அகலப் பாதையாக்கும் பணிகள், 358 கோடி ரூபாயில் 2010 செப்.,20ல் துவங்கின.
மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப் பட்டது. புகழ் பெற்ற 13 கண் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டது.
ஆனால் பாரம்பரிய சின்னமாக கருதப்படும் அதை இடிக்க கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன்பின் பழைய பாலத்தின் தன்மை மாறாமல்
பலப்படுத்தப்பட்டு அகலபாதை அமைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு தாமதம், பால
பிரச்னை போன்றவற்றால் கடும் இழுபறி ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்குப்பின் தற்போது
பணிகள் முடிந்துள்ளன.
சிறப்பு ரயில் இயக்கம்:
நடப்பு நிதியாண்டுக்குள் ரயில் இயக்க வேண்டும் என்பற்காக நேற்று முன்தினம் தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சிறப்புரயில் இயக்கப்பட்டது. நேற்று காலை 5:50 மணிக்கு செங்கோட்டை வந்த ரயிலுக்கு, கொல்லம் காங்கிரஸ் எம்.பி., கொடிக்குன்னில் சுரேஷ், ஆர்.எஸ்.பி., கட்சி எம்.பி., என்.கே.பிரேமசந்திரன், கேரள ரயில் பயணிகள் சங்கத்தினர் வரவேற்பளித்தனர். பயணிகளுடன் சேர்ந்து ரயிலில் பயணித்தனர். ஆனால் தமிழக பகுதி எம்.பிக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
தொடர்ந்து ரயிலுக்கு ஆரியங்காவு, கல்துருத்தி, எடமண், தென்மலை, புனலுார் என அனைத்து ரயில் நிலையங்களிலும் கட்சி பாகுபாடின்றி மேளதாளம் முழங்கி இனிப்பு வழங்கி வரவேற்றனர். பிரேமசந்திரன் கூறுகையில், ''கொல்லத்தில் இருந்து நாகூர், ராமேஸ்வரம், துாத்துக்குடிக்கு ரயில்கள்இயக்க கேட்டுள்ளோம்,'' என்றார்.
பயணிகள் சங்க பிரமுகர்
பிரமநாயகம் கூறுகை யில், ''விருதுநகர்- சங்கரன்கோவில் இடையே முன்பிருந்த
பல ஸ்டேஷன்களை மூடிவிட்டனர். ஆனால் கேரளத்தில் புதிய ஸ்டேஷன்களை
ஏற்படுத்தியுள்ளனர்.மூட பட்டுள்ள ஸ்டேஷன் களை செயல் படுத்த வேண்டும்,'' என்றார்.
எங்கே போயினார் எம்.பி.,க்கள்
தென்மாவட்டங்களின் நீண்டநாள் கோரிக்கை யான ரயில் விடப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்கள் முத்துகருப்பன், விஜிலா சத்தியானந்த், லோக்சபா எம்.பி.,க்கள் நெல்லை பிரபாகரன், தென்காசி வசந்தி என யாரும் ரயிலை வரவேற்க வரவில்லை.''தங்களின் சாதனை என கூறிகொள்ள கிடைத்த வாய்ப்பை பா.ஜ.,வும் கோட்டை விட்டு விட்டது,'' என தமிழக பயணிகள் தெரிவித்தனர்.
கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையிலும் குகைகள், மலைப்பாதைகள், அடர்வனம் வழியாக செல்லும் ரயில் செல்லும் போது பாதையெங்கும் இயற்கை எழில் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இந்த பாதைய மூலம் கேரளத்தின் தென்மலை, பாலருவி போன்ற சுற்றுலா தலங்கள் மேம்பட வாய்ப்புள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து