பார்லிமென்ட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, அ.தி.மு.க., மற்றும் காங்., எம்.பி.,க் களுக்கு இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படவிருந்த மிகப் பெரிய கைகலப்பு தவிர்க்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி, பார்லிமென்டில், அம்மாநில, எம்.பி.,க் கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். தமிழக, எம்.பி.,க் களோ,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, லோக்சபாவில் அமளியில் ஈடுபடுகின்றனர்.
இதனால், சபையில் அமைதி இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதையே காரணமாக வைத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள முடியாத நிலை, தினமும் ஏற்படுகிறது. நேற்று காலையில், லோக்சபா அலுவல்கள் துவங்கியதும், அமளி ஏற்பட்டு, சபை ஒத்தி வைக்கப்பட்டது.
பகல், 12:00 மணிக்கு கூடியபோது, சபாநாயகர், சுமித்ரா மகாஜன் வந்ததும், எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள், அமைதியாக எழுந்து, தங்களின் நம்பிக்கை யில்லா தீர்மானத்தை அனுமதிக்கும்படி வலியுறுத்தினர். அப்போது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கோஷங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி வரிசையில் உள்ள, எம்.பி.,க்களின் முகங்களை, சபாநாயகர் காண முடியாத வகையில், போஸ்டர்களை உயர்த்தி பிடித்தபடி, அ.தி.மு.க.,வினர் நின்றனர். காங்கிரஸ், எம்.பி.,க்கள், இதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தனர்.
ஏமாற்றம்:
சில நிமிடங்களில்,''சபையில் அமைதியில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள இயலாது,'' என, வழக்கம் போல கூறிவிட்டு,சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சபையை ஒத்திவைத்துவிட்டுச் சென்றார்; சபை கலைந்து, ஒருசிலர் வெளியேறிய நிலையில், எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
தினமும்,
தாங்கள் கொண்டு வரும் தீர்மானத்துக்கு, வேண்டுமென்றே இடையூறு செய்கின்றனரே
என கருதி, கடும் கோபத்துடன், அ.தி.மு.க., - எம்.பி.,க் களை நோக்கிச் சத்தம்
போட்டனர். கேரள, எம்.பி., வேணுகோபால், ''பா.ஜ.,வுடன், 'மேட்ச் பிக்ஸிங்' செய்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில்,வேண்டுமென்றே நாடகம் ஆடுகிறீர்களா,'' என, சத்தமாக கூறினார்.
இதையடுத்து, அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு கடும் கோபம் வந்து விட்டது. நாமக்கல், எம்.பி., சுந்தரம், கடும் ஆவேசத்துடன், அவரை நோக்கி முன்னேறிச் சென்றார். மற்ற, எம்.பி.,க்கள் தடுத்தும் நிற்காமல், கோபம் காட்டவே, சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்வரிசையில் நின்ற, காங்கிரஸ் கட்சியின், மூத்த, எம்.பி., மல்லிகார்ஜுன கார்கேவும், ''உங்களை சபையை விட்டு சஸ்பெண்ட் செய்ய வேண்டும்,'' என, கோபத்துடன் கூறினார். ஆரணி தொகுதி, எம்.பி., ஏழுமலை, அவரை நோக்கி, பலமாக கத்தியபடி வரவே, நிலைமை களேபரமானது.
குற்றச்சாட்டு
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடத்துவதற்கு, முட்டுக்கட்டை போடும் வகையில், மத்திய அரசுக்கு ஆதரவாக, அ.தி.மு.க., - எம்.பி.,க் கள் செயல்படுவதாக, எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு களை தெரிவித்தனர்.அ.தி.மு.க., - காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கும் இடையில் வாக்கு வாதம் அதிகரித்து, ஒரு கட்டத்தில், மிக நெருக்கத் தில் நேருக்குநேர் மோதலுக்கு தயாராயினர்.
கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. மல்லிகார்ஜுன கார்கே அருகில் நின்றிருந்த
சோனியா உட்பட, முன்வரிசை காங்கிரஸ், எம்.பி.,க் கள் மீதும் பாயும் அளவுக்கு நிலைமை இருந்தது. பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சபைக்குள்
அமர்ந்திருந்த ஒட்டுமொத்த, எம்.பி.,க்களும் கவனிக்க, ஓங்கி ஓங்கி பலமாக
கத்தி, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், மோதலில் இறங்குவதற் காக முன்னேறிச்
சென்றது, தெருவில் நடக்கும் சண்டையைப் போலவே இருந்தது.
இந்த மோதல் காட்சிகள், 20 நிமிடங்கள் வரை நீடித்தன. மற்ற கட்சி, எம்.பி.,க்கள் தலையிட்டு, இரு தரப்பையும் பிரித்து, அழைத்துச் சென்றதால், பிரச்னை முடிவுக்கு வந்தது.சபை ஒத்தி வைக்கப்பட்டதும், சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அ.தி.மு.க., - எம்.பி.,க்களை சந்தித்து, சபையை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதித்தார்.
ராஜ்யசபாவிலும் அமளி
நேற்று காலை, ராஜ்யசபா கூடியதும், ஓய்வு பெற்றுச் செல்லும், எம்.பி.,க்களுக்கு பிரிவு
உபசார விவாதம் நடத்த திட்டமிடப் பட்டு இருந்தது. சபைத் தலைவர், வெங்கையா நாயுடு, இது குறித்த விவாதத்தை துவங்கிய தும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர்.சபை ஒத்திவைக்கப் பட்டு, அரை மணி நேரம் கழித்து மீண்டும் கூடியது.
அப்போதும், அ.தி.மு.க., - எம்.பி.,க் கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்றபடி இருந்தனர். எவ்வளவோ கேட்டும், இருக்கை களில் அமராததால், அலுவல்களை தொடர முடியாமல் போகவே, ராஜ்யசபாவும், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது
சசிகலா புஷ்பாவால் எம்.பி.,க்கள் பீதி
நேற்று காலை, 10:30 மணிக்கு, காந்திசிலை முன், வழக்கம்போல, ஆர்ப்பாட்டம் நடத்த, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் தயாராயினர். அந்த நேரத்தில், நேற்று முன்தினம் மறுமணம் செய்த, சசிகலா புஷ்பாவும், 'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவும்' என்ற போஸ்டரோடு அங்கு வந்து வரிசையில் நிற்க, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வெலவெலத்து போயினர். உடனே, அங்கிருந்து நகர்ந்து, எதிர் திசையில் போய் நின்று, தனியாக கோஷங் களை போட்டது, வேடிக்கையாக இருந்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து