புதுடில்லி: 'கர்நாடக மாநிலத்தில், சட்டசபைத் தேர்தல், மே, 12ல், ஒரே கட்டமாக நடக்கும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
மே, 15ல், ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகும்.கர்நாடகாவில், காங்.,கைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இந்த அரசு பதவியேற்று ஐந்தாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், டில்லியில் நேற்று, கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பை, தலைமை தேர்தல் கமிஷனர், ஓ.பி. ராவத் வெளியிட்டார்.
நடத்தை விதிகள்
இதுபற்றி அவர் கூறுகையில்,''கர்நாடக சட்டசபை தேர்தல், மே, 12ல் நடக்கும்; ஓட்டு
எண்ணிக்கை, மே, 15ல் நடக்கும்.
''இந்த தேர்தலில், ஓட்டுப் பதிவு
இயந்திரங்களும், ஓட்டு போட்ட தற்கான ஒப்புகை சீட்டு அளிக் கும்,
வி.வி.பி.ஏ.டி., இயந்திரங்களும் பயன் படுத்தப்படும்,'' என்றார். தேர்தல்
கமிஷனரின் இந்த அறிவிப்புடன், கர்நாடகா வில், தேர்தல் நடத்தை விதிகள், அமலுக்கு வந்தன.
கர்நாடக சட்டசபை, 224 உறுப்பினர் பலம் உடையது. 2013ல், நடந்த தேர்தலில், காங்., 36 சதவீத ஓட்டு களுடன், 122 தொகுதிகளை வென்று, ஆட்சியை கைப்பற்றியது; பா.ஜ., 40 இடங்களை வென்றது.தேவ கவுடா தலைமை யிலான, மதச்சார்பற்ற ஜனதாதளம், 40 இடங்களை கைப்பற்றியது.
கர்நாடக சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாள ராக, தற்போதைய முதல்வர் சித்த ராமையாவை அறிவிக்க,காங்., முடிவு செய்துள்ளது. பா.ஜ., சார்பில், முதல்வர் வேட்பாளராக, முன்னாள் முதல்வர் எடியூரப்பா களமிறங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை கருத்தில் வைத்து, ஆளும், காங்., கட்சி ஏற்கனவே காய்களை நகர்த்தி தயாராக உள்ளது. மாநிலத்தில், 17 சதவீத மக்கள் தொகையுள்ள, லிங்காயத், வீரசைவ லிங்காயத்து சமூகத்தை, சித்தராமையா தலைமையிலான அரசு, தனி மத மாக, சமீபத்தில் அறிவித்தது. முக்கிய எதிர்க்கட்சி யான, பா.ஜ.,வும், சமீப காலமாக,
கர்நாடகாவில் தீவிர பிரசாரத்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, கர்நாடக மாநில
சட்டசபைத் தேர்தல் தேதியை, பா.ஜ., வைச் சேர்ந்த, அமித் மாளவியா, தேர்தல்
கமிஷன் அறிவிக்கும் முன்பே, 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில் வெளியிட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கேள்வி:
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காங்., தலைமை செய்தி தொடர்பாளர், ரந்தீப் சுர்ஜேவாலா, 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில், 'சூப்பர் தேர் தல் கமிஷன்' என, குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, பா.ஜ., தலைவர், அமித் ஷா வுக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்புமா; பா.ஜ.,வுக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுமா என்றும், காங்., கேள்வி எழுப்பி உள்ளது.
இதற்கு பதில் அளித்த, அமித் மாளவியா, தனி யார், 'டிவி' சேனலில் வெளியான செய்தியை, டுவிட்டரில் பதிவிட்டதாக கூறியுள்ளார். தேர்தல் தேதி, முன்கூட்டியே வெளியானது தொடர்பாக விசாரிக்க, தேர்தல் கமிஷன், ஒரு குழுவை அமைத்துள்ளது.
'மேலாண்மை வாரியம் அமைக்க தடை இல்லை'
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனர், ஓ.பி.ராவத், டில்லியில் நேற்று கூறியதாவது:காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதுவாக இருப்பினும், அதை அமல் படுத்த, கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு தடையாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம்,கர்நாடகா தேர்தல் தேதி அறிவிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடையாக இருக்காது என, ராவத் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து