போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த, தனி அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி, தமிழக அரசுக்கு, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அனுப்பி உள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
ஆவணங்கள் சமர்ப்பிப்பு
இதுவரை, டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.அவர்களிடம், குறுக்கு விசாரணை நடத்த, சசிகலாவின் வழக்கறிஞர்கள் அனுமதி பெற்று உள்ளனர்.இந்நிலையில், மருத்துவமனையில், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட, சிகிச்சை தொடர்பான ஆவணங்களை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், விசாரணை கமிஷனில் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு சார்பிலும், சுகாதாரத் துறை செயலர், பல மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.அவற்றை ஆய்வு செய்து, விசாரணை கமிஷனுக்கு தேவையான தகவல்களை தெரிவிக்க, அரசு
மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமிக்கும்படி, தமிழக அரசுக்கு, விசாரணை கமிஷன் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
அதிகாரி நியமனம்
ஆனாலும்,இன்னும் மருத்துவர்கள் குழு அமைக்கப்படவில்லை.விரைவில் அமைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஓய்வுபெற்ற போலீஸ், டி.ஜி.பி., ராமானுஜம், சி.பி.சி.ஐ.டி., - ஐ.ஜி., தாமரைக்கண்ணன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத் தலைவர், திரிபாதி, மாநில குற்றப்பிரிவு கூடுதல், டி.ஜி.பி., அம்ரிஷ் பூஜாரி ஆகியோரிடம், இதுவரை கமிஷன் விசாரணை நடத்தி உள்ளது. மேலும், பல போலீஸ் அதிகாரிகளிடமும், விசாரணை நடத்த வேண்டியுள்ளது.எனவே, போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, கமிஷனுக்கு அறிக்கை அளிக்க, தனி அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி, தமிழக அரசுக்கு, விசாரணை கமிஷன் சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனால், ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள, ஐ.பி.எஸ்.,அதிகாரி ஒருவர், விரைவில், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுவார் என, தகவல் வெளியாகி உள்ளது.
ஜெ., பாதுகாப்பு அதிகாரிக்கு, 'சம்மன்'
ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரியாகஇருந்த,
வீரபெருமாள், இன்று ஆஜராக, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், 'சம்மன்' அனுப்பி உள்ளது.ஜெ., மரணம் குறித்து விசாரிக்கும் கமிஷனில், சசிகலா பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த, கூடுதல் டி.எஸ்.பி., வீரபெருமாள், நேரில் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, வீரபெருமாளிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டு, இன்று ஆஜராக, விசாரணை கமிஷன் சார்பில், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.ஏற்கனவே ஆஜராகி, வாக்குமூலம் அளித்துள்ள,டாக்டர்கள், விமலா, நாராயணபாபு, கலா, முத்துச்செல்வன், டிட்டோ, தர்மராஜன், பாலாஜி ஆகியோரிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள், நாளை குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து