சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, உச்ச நீதிமன்றம் விதித்த, ஆறு வார கெடு முடிய, இன்னும் இரு நாட்களே உள்ளன. ஆனாலும், இந்த விஷயத்தில், மத்திய அரசு அசைந்து கொடுக்காமல் மவுனம் சாதிப்பதால், அ.தி.மு.க., அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
காவிரி வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், பிப்., 16ல், அளித்த தீர்ப்பில், 'ஆறு வாரத்திற்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியாகி, வரும், 29ம் தேதியுடன், ஆறு வாரம் முடிகிறது.
அதற்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்க வேண்டும் என, பார்லிமென்டில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டசபையை கூட்டி, சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இங்குள்ள எல்லா கட்சிகளும், இவ்விவகாரத்தில் குரல் கொடுத்து வருகின்றன.
ஆனாலும், பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. இடையில், மத்திய அரசு சார்பில், நான்கு மாநில தலைமை செயலர்கள் பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டு, இப்பிரச்னை
குறித்து விவாதிக்கப்பட்டதோடு சரி. அதன்பின், எந்த நடவடிக்கையும், மத்திய அரசால் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில்,சென்னையில், நேற்று செய்தியாளர்களை
சந்தித்த, மாநில அமைச்சர், ஜெயகுமார், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க
வைப்பதில், உறுதியாக உள்ளோம்,'' என்றார்.அவர் அளித்தபேட்டி:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்கும் என்ற, நம்பிக்கை உள்ளது. அதை, அமைக்க வைப்போம்; அதில், உறுதியாக உள்ளோம். நம் கருத்தை ஆணித்தரமாக, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்.
தி.மு.க.,வை விட, தமிழக உரிமைக்காக, அ.தி.மு.க., போராடி உள்ளது. எந்த போராட்டமும், தி.மு.க., நடத்தவில்லை. மத்திய அரசில் இடம் பெற்றிருந்த காலத்தில், தமிழகத்திற்கு, தி.மு.க., எதுவும் செய்யவில்லை. அக்கட்சி, நேரத்திற்குநேரம் பச்சோந்தித்தனமாக, நிறம் மாறுகிற வல்லமை படைத்தது.நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் எதிர்க்கட்சியினர், தங்களை முன்னிலைப்படுத்த, அவர்களின் கொள்கைகளை, மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
அவர்களை ஏற்பது குறித்து, மக்கள் இறுதி முடிவு எடுப்பர். ஆனால், எங்களைப் பற்றி பேசினால் தான், அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கிறது. அதனால்,எங்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்.அரசின் குறைகளை சுட்டிக்
காட்டலாம். அதை, ஆரோக்கியமான விமர்சனமாக எடுத்துக் கொள்வோம். ஆனால்,
காழ்ப்புணர்ச்சியோடு, சேற்றை வாரி இறைக்கும் செயலை ஏற்க மாட்டோம். அரசு குறித்து குறை கூறுவோருக்கு, நாங்களும்
பதிலடி கொடுப்போம். வீணாக வாயை கொடுத்து, வம்பில் மாட்ட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செயற்குழுவை கூட்டுது தி.மு.க.,
!
காவிரி விவகாரத்தில், போராட்டம் நடத்துவது பற்றி விவாதிக்க, தி.மு.க., செயற்குழு கூட்டம், வரும், 30ம் தேதி, சென்னை, அறிவாலயத்தில் நடக்கிறது.
'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கையை வலியுறுத்தி, மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' என, நேற்று முன்தினம், ஈரோட்டில் நடந்த, தி.மு.க., மண்டல மாநாட்டில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து, தி.மு.க., முன்னெடுக்கும் போராட்டத்தை, தனித்து நடத்தலாமா அல்லது கூட்டணி கட்சிகளையும் சேர்த்து நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்க, 30ம் தேதி, சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, நேற்று அக்கட்சியின் பொதுச்செயலர், அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (8)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply