புதுடில்லி:ராஜ்யசபாவில் காலியாக உள்ள, 59 இடங்களுக்கு நடந்த தேர்தலில், 28 இடங்களில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், 10 இடங்களிலும், திரிணமுல் காங்கிரஸ், நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ராஜ்யசபா, எம்.பி.,யாக இருந்த, 58 பேரின் பதவிக்காலம், ஏப்., 2ம் தேதி முடிவடைகிறது. இந்த இடங்களுடன் கேரளாவில், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகிய அதிருப்தி தலைவர், வீரேந்திர குமார் ராஜினாமா செய்த இடத்துக்கும் நேற்று தேர்தல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது.மொத்தம்,16 மாநிலங்களில்,
59 இடங்களுக்கு நடைபெறுவதாக இருந்த தேர்தலில், 33 பேர் போட்டியின்றி வென்றனர்.
ஏழு மாநிலங்களில், மீதமுள்ள 26, இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது.அதிகபட்சமாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி உள்ள
உத்தர பிரதேசத்தில், 10 இடங்களுக்கும், பீஹார் மற்றும் மஹாராஷ்டிராவில்
தலா, ஆறு இடங்களுக்கும் தேர்தல் நடந்தது.
உத்தர பிரதேசத்தில், எட்டு இடங்களில், பா.ஜ.,வின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. மீதமுள்ள இரண்டில், முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரின் வெற்றி யிலும் எந்த சிக்கல் இல்லை. அதே நேரத்தில் முன்னாள் முதல்வர், மாயாவதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளரின் வெற்றிக்கு, மேலும் 19 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், சுயேச்சை ஒருவரை வேட்பாளராக, பா.ஜ., நிறுத்தியது.
நேற்று நடந்த தேர்தலின்போது, பகுஜன் சமாஜ் கட்சி, எம்.எல்.ஏ., அனில் சிங், கட்சி மாறி,
பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்ததாக அறிவித்தார். சுயேச்சைகளின் ஆதரவு
கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், அதுவும் கிடைக்காததால்,
பகுஜன் சமாஜ் வேட்பாளர், அனில் அகர்வால் தேர்வாவது சந்தேகமானது.
அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனில் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புகார் அளித்ததால், ஓட்டு எண்ணிக்கை தாமத மானது. மற்ற மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், உ.பி.,யில் பதிவான ஓட்டு எண்ணிக்கை தாமதமானதால், முடிவு அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இறுதியில், 9ல் பா.ஜ.,வும், ஒன்றில், சமாஜ்வாதி யும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
மொத்தமுள்ள, 59 இடங்களில், பா.ஜ., 28 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி, 10 இடங்களிலும், திரிணமுல் காங்கிரஸ், நான்கு இடங்களிலும் வென்றது.இடைத் தேர்தல் நடந்த கேரளாவில், ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் ஆதரவுடன், ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி தலைவர், வீரேந்திர குமார் வெற்றி பெற்றார்.ராஜ்யசபாவில், இந்த தேர்தலை அடுத்து, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் பலம், 88 ஆக உயர்ந்து உள்ளது. காங்., கூட்டணி பலம், 57 ஆனது. பிற கட்சிகளின் பலம், 100.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து