சென்னை: சென்னை உட்பட, பல இடங்களில் செயல்பட்டு வந்த, கனிஷ்க் நகை கடையின் அதிபர்கள், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக, டில்லி சி.பி.ஐ.,யில், புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வருமானத்தையும், விற்பனையையும் பூதாகரமாக்கி, இவ்வளவு பெரிய மோசடியை, அவர்கள் அரங்கேற்றியது, விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு அளித்துள்ள புகாரில், இந்த நகைக்கடை நிறுவனம், 20 கோடி ரூபாய்க்கு மேல், கலால் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் கூறியுள்ளது. இதுபோன்ற வங்கி கடன் ஊழல்கள், அடுத்தடுத்து வெளியாவதால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர், பூபேஷ்குமார் ஜெயின்; இவரது மனைவி, நீடா. இருவரும், கே.ஜி.பி.எல்., எனப்படும், 'கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டம், நடராஜபுரம், புக்கதுறை கிராமத்தில், நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தனர்.
சென்னை உட்பட, நாடு முழுவதும் உள்ள, பிரபல ஜுவல்லரிகளுக்கு, விதவிதமான டிசைன்களில் நகை தயாரித்து, சப்ளை செய்தும் வந்தனர்.கனிஷ்க் என்ற பெயரில், தங்கம் மற்றும் வைர நகை விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வந்தனர்.இவர்களின் தொழில் கூட்டாளிகளாக, சென்னை, யானைக் கவுனியைச் சேர்ந்த தேஜாராஜ், அஜய்குமார், சுமித் உள்ளிட்டோர் செயல்பட்டு வந்தனர்.
ரூ.10 கோடி:
பூபேஷ்குமாரும், அவரது மனைவியும், கூட்டாளிகளுடன் சேர்ந்து, 2008ல், சென்னையில் உள்ள, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், தங்கள் நிறுவனம், 50 கோடி ரூபாய் லாபம் ஈட்டிஇருப்பதாக, போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, 10 கோடி ரூபாய் கடன் வாங்கினர்.பின், அடுத்தடுத்த ஆண்டு களில், பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருப்பதாக, போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, எஸ்.பி.ஐ., வங்கியில் மட்டும், 240.46 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி என, 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்து உள்ளனர்.மோசடி பணத்தில், பூபேஷ் குமார், நீடா மற்றும் அவர்களது கூட்டாளிகள், சென்னை, என்.எஸ்.சி., போஸ் சாலை, மும்பை, ஐதராபாத், கொச்சி மற்றும் துபாயில், தங்கம் மற்றும் வைர நகை கடைகளை திறந்துள்ளனர்.
'நகை இருப்பு அதிகமாக உள்ளது; ஆண்டு லாபமும் பல கோடி ரூபாய் ஈட்டிஉள்ளோம்' , என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தே 824.15 கோடி ரூபாயை கடனாக பெற்று உள்ளனர். முதலீடு செய்த அளவுக்கு வருமானம் இல்லாததால்,வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளனர்.இதனால், அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை, வங்கிகள் ஆராய துவங்கின. நகை தொழிற்சாலையில் உள்ள, இருப்பு விபரங்களையும்சேகரித்தன.
போலி கணக்கு
அப்போது, பூபேஷ்குமார், நீடா மற்றும் அவர்களது கூட்டாளிகள், ஆண்டு வருமானம் மற்றும் இருப்பு விபரம் குறித்து போலியாக கணக்கு காட்டி, மோசடியில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, பூபேஷ்குமார் உள்ளிட்டோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, எஸ்.பி.ஐ., வங்கி தலைமையில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அவர்கள், கடன் தொகையை வசூலிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினர்.
இதற்கிடையில், 2017ல், பூபேஷ்குமார், 20 கோடி ரூபாய் கலால் வரி செலுத்தாத வழக்கில் சிக்கினார். அதனால், நகை தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்ட, கனிஷ்க் ஜுவல்லரி மற்றும் தி.நகரில் இருந்த, 'கார்ப்பரேட்' அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.
அதனால், பூபேஷ்குமார் மற்றும் அவரது மனைவி, கூட்டாளிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, எஸ்.பி.ஐ., வங்கி தலைமையிலான கூட்டமைப்பு, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில், நேற்று ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளது. அதனடிப்படையில், சி.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது.
நாடு முழுவதும், கனிஷ்க் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தியது.ஏற்கனவே, நிரவ் மோடி, விக்ரம் கோத்தாரி போன்றவர்கள் செய்த முறைகேடுகளால், வங்கி ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரமும் வெடித்துள்ளதால், முழு அளவில் விசாரணை நடத்த வேண்டிய நெருக்கடி, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து