சென்னை:''மணல் குவாரிகளை திறக்கவும், வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில், பொது மக்களுக்கு தேவையான மணல் தட்டுப்பாடின்றி வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
சட்டசபை காங்., தலைவர், ராமசாமி: மணல் பிரச்னையை, அரசு முறையாக கையாள வில்லை. குவாரிகளை திறந்தால், மணல் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம். குவாரிகளை திறக்காததால், அரசுக்கு, பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்காமல் போய்விட்டது.
முதல்வர் பழனிசாமி: நீதிமன்றங்களில் பல
மாதங்களாக, பொதுநல வழக்குகள் நடந்ததால், மணல் குவாரிகளை திறப்பதில் சிக்கல்
ஏற்பட்டது. இவ்வழக்குகள் முடிந்து, தீர்ப்பு கிடைத்து உள்ளது.
அரசு, மணல்
விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளது. குவாரிகளைதிறப்பதற்கு, ஆறு நாட்களுக்கு முன் ஒப்பந்தம் கோரப்பட்டது; சில குவாரிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
மீதமுள்ள குவாரிகளுக்கு, மீண்டும் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. மணல் குவாரி விதிமீறல்களை தடுக்க, ஒப்பந்தத்தில் கடுமையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. குவாரிகள் மட்டுமின்றி, மணல் விற்பனை கிடங்குகளும், 'சிசிடிவி' கேமரா வாயிலாக கண்காணிக்கப்பட உள்ளன.குவாரிகளில் இருந்து கிடங்குகளுக்கு, மணல் ஏற்றி செல்லும் லாரிகளை கண்காணிப்பதற்காக, அவற்றில், ஜி.பி.எஸ்., கருவிபொருத்தப்பட உள்ளது. 'ஆன்லைன்' மூலம் மட்டுமே, மணல் விற்பனை நடக்கவுள்ளது.
எங்கும்
தவறு நடக்காதபடி, சட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில்
இருந்தும், மணல் இறக்குமதி செய்ய, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்த
நிறுவனங்கள்
வாயிலாக, கொண்டு வரப்படும் மணலை, துறைமுகங்களில் வைத்து, அரசு நேரடியாக விற்பனை செய்யும். துறைமுகங்களில் மணல் விற்பனை செய்வதும், 'சிசிடிவி' கேமரா வாயிலாக கண்காணிக்கப்படும்.
இறக்குமதி செய்தது கலப்பட மணலா, கட்டு மானத்திற்கு உகந்தா என்பது, ஆய்வு செய்யப் படும். அதன்பின், விற்பனை செய்யப்படும். இனி, தனியாரால் மணல் விற்பனை செய்வது அனுமதிக்கப்படாது. விரைவில், பொது மக்களுக்கு தேவையான மணல் தட்டுபாடின்றி வழங்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து