மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரச்னையில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோபமும், அதிருப்தியும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மீது திரும்பியுள்ளது. தேவையில்லாமல் அமளியில் ஈடுபட்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிரான விவாதத்தை நடத்த விடாமல், அ.தி.மு.க.,வினர், மத்திய அரசை காப்பாற்றுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மத்திய அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட, ஆந்திர மாநில, எம்.பி.,க்கள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட வேண்டுமெனில், சபையில், 50 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. அமளியோ, கூச்சல், குழப்பமோ இல்லாமல், சபை அமைதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு இல்லையெனில், சபாநாயகர், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கலாம். இந்நிலையில், 16ம் தேதி நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தை, எதிர்க்கட்சிகள், நேற்று மீண்டும் லோக்சபாவில் தாக்கல் செய்தன.
முற்றுகை
இத்தனை நாட்களாக, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளி செய்த எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் அனைவருமே அவரவர் இருக்கைகளில் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஆனால், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மட்டுமே, சபையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கோஷம் எழுப்பினர்.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, எம்.பி.,க்கள் சிலர் நின்றிருந்தாலும், அ.தி.மு.க.,வின் குரலே பலமாக ஒலித்தது. அமளி அதிகமாகி, 12:00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் சபை கூடியபோது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மீண்டும் அமளியில் இறங்கினர்.அப்போது, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், ''நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தவே அரசு விரும்புகிறது,'' என்றார். ஆனாலும், அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் அமளி தொடர்ந்தது.
இதை, மற்ற கட்சி, எம்.பி.,க்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.
சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ''தீர்மானத்தை ஆதரிக்கும், எம்.பி.க்கள் யார்
என, எனக்கு தெரிய வேண்டும்; அவர்களின் தலைகளை எண்ண வேண்டும்; ஆனால்,
சபையில் அமைதி இல்லையே,'' என்றார்.
உடனடியாக, ஒட்டு மொத்த எதிர்க்கட்சி,
எம்.பி.,க்களும் எழுந்து, இரு கைகளையும் உயர்த்தி, 'தீர்மானத்தை
ஆதரிக்கிறோம்; விவாதத்தை அனுமதியுங்கள்' என, வலியுறுத்தினர். ஆனாலும்,
அ.தி.மு.க.,வினரின் கோஷங்கள் ஓங்கி ஒலிக்க, அதையே காரணமாக வைத்து,''சபையில் அமைதி இல்லை; எனவே, தீர்மானத்தை எடுத்துக் கொள்ள இயலாது,'' என கூறிய, சபாநாயகர், சுமித்ரா மகாஜன், எழுந்து சென்றார்.இதனால், சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளின் கோபமும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மீது திரும்பிஉள்ளது.இது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு, மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்த தீர்மானத்தை, காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் அமளியில் ஈடுபட்டு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், சீர்குலைத்து விட்டனர்.
தீர்மானத்தை, அ.தி.மு.க., ஆதரிப்பதாலோ, ஓட்டு போடுவதாலோ, மத்திய அரசு கவிழ்ந்து விடாது.தீர்மானத்தை, ஆந்திர, எம்.பி.,க்கள் தாக்கல் செய்திருந்தாலும், அதில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்றெல்லாம் குறிப்பிடவில்லை.
வலுவான வாதம்
அந்த நோட்டீசில், 'நம்பிக்கை இல்லா தீர்மானம்' என மட்டுமே, குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால், விவாதத்தின்போது, ஒவ்வொரு கட்சியும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, முக்கிய பிரச்னைகளைப் பேசலாம்.உதாரணமாக, காஷ்மீர், எம்.பி.,க்கள் குண்டு வெடிப்புகளையும், பஞ்சாப், எம்.பி.,க்கள் விவசாயிகள் பிரச்னை குறித்தும் பேசுவர்.
அதுபோல, அ.தி.மு.க., நினைத்திருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை சரியாக பயன்படுத்தி, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பேசியிருக்க முடியும்.இதன் மூலம், விவாதத்துக்கு வழி ஏற்படுத்தலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய அவசியத்தையும்,சிக்கல்களையும், பார்லி மென்டில், வலுவான வாதங்களால் எடுத்து வைத்திருக்க முடியும்.
பா.ஜ.,வையோ, மத்திய அரசையோ விமர்சித்துக் கூட பேச வேண்டிய அவசியமில்லை.
துயரம்
குறைந்தபட்சம், விவாதத்தின்போதுதமிழகத்தின் ஜீவதாரப் பிரச்னையின் முழு துயரத்தையும், தேசிய அரங்கில் வெளிச்சம் ,
போட்டு காட்டியிருக்கலாம்.இந்த வாய்ப்பை அ.தி.மு.க., தவற விட்டுள்ளது. பார்லிமென்டை பயன்படுத்தும் வழிமுறைகள், தம்பிதுரை, வேணுகோபால் போன்ற மூத்த, எம்.பி.,க்களுக்கு தெரியாமல் இருக்காது. ஆனாலும், விடாப்பிடியாக, அமளி செய்கின்றனர் எனில், அது, எதிர்க்கட்சிகளால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து, பா.ஜ.,வை காப்பாற்றும் நடவடிக்கையே அன்றி, வேறொன்றும் இல்லை.இதனால், தேசிய அளவில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் கோபமும், அதிருப்தியும், அ.தி.மு.க.,வின் பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில், இன்று, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய, எதிர்க்கட்சிகள், 'நோட்டீஸ்' அளித்துள்ளதால், பரபரப்பு காணப்படுகிறது.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
சமாஜ்வாதி பாய்ச்சல்
சமாஜ்வாதி கட்சியின் மூத்த, எம்.பி., ராம்கோபால் யாதவ், நிருபர்களிடம் கூறியதாவது:எதிர்க்கட்சிகளின் கோபாவேசத்தில் இருந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அ.தி.மு.க., - எம்.பி.,க்களை, பா.ஜ., ஏவி விடுகிறது; அதன்படியே, அமளி செய்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய விடாமல், அ.தி.மு.க., தடுக்கிறது. இந்த கட்சி, எம்.பி.,க்களின் செயல்பாடுகள், முற்றிலும், பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
'நினைத்தால் முடியும்'
தெலுங்கு தேசம், எம்.பி., சீனிவாச ராவ், நிருபர்களிடம் கூறியதாவது:சபாநாயகர் நினைத்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொண்டு, சபையில் விவாதம் செய்ய அனுமதி வழங்க முடியும். ஆனாலும், அ.தி.மு.க.,வினர் அமளி செய்வதாக பழிபோட்டு, அதன் மூலம், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் எடுத்துக் கொள்ளப்
படாமல் தடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (19)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply