தமிழகத்தைச் சேர்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கொண்டாடும் விதமாக, சென்னை, கோவை, திருச்சி, ஓசூர், சேலம் நகரங்களுக்கு அடித்த, 'ஜாக்பாட்' பரிசாக, 'பாதுகாப்பு தொழில் பெருவழித்தடம்' திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்புத் துறைக்கு தேவையான ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் தொழில்கள் நிறைந்த வட்டாரமாக, இப்பகுதிகள் மாறவிருப்பதால், அங்கு தொழில் துவங்க வாருங்கள் என, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.
'டிபென்ஸ் காரிடார் என, அழைக்கப்படும், பாதுகாப்புத் தொழில் பெருவழித்தடம் தமிழகத்தில் அமைக்கப்படும்' என்ற அறிவிப்பை, நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, மத்திய பட்ஜெட்டில்
அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில், சிறு, குறு தொழில் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன், மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில், புதிய தொழில் புரட்சியை ஏற்படுத்தவிருக்கும், இத்திட்டம் பற்றி, ராணுவ
அமைச்சர், நிர்மலா சீதாராமன், நமது நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
'இண்டஸ்ட்ரியல் காரிடார்' என்ற, தொழில் பெருவழிதடம் கேள்விப்பட்டிருக்கிறோம்; இது என்ன, 'டிபென்ஸ் காரிடார்?'
'டிபென்ஸ் காரிடார்' என்ற, ராணுவ தொழில் பெருவழித்தடமாக, சென்னை, ஓசூர், கோவை, சேலம், திருச்சி பகுதிகளை அறிவித்திருக்கிறோம். இப்பகுதிகளில் உள்ள சிறு, குறு, பெரிய தொழில் செய்பவர்கள், பாதுகாப்புத் துறைக்குத் தேவையான கருவிகளைத் தயாரித்து வழங்க, ஆர்வம் தெரிவித்தால், அதற்குத் தேவையான மாறுதல்களைச் செய்வதற்கு, அவர்களுக்கு உதவுவோம்.
பின், அடுத்த ஐந்தாண்டுகளில், அவர்களிடம் இருந்து, கருவிகளை வாங்குவதற்கான முன்னேற்பாடு தான், இந்த காரிடர். மேலும், அன்னியச் செலாவணியைச் செலவழித்து, நாம் வெளிநாடுகளில் இருந்து, பல ஆயுதங்களை வாங்குகிறோம். அதற்குப் பதில், அவர்களே இங்கே வந்து, உற்பத்தி செய்யலாம். அதற்குத் தேவைப்படும் பொதுவான வசதிகளை, நாம் ஏற்படுத்தி தருவோம்.அவர்கள் தொழில் நுட்பத்தையும், முதலீட்டையும் மட்டும் கொண்டு வந்து, இங்கே தொழில் துவங்கலாம்.
அப்போது, அவர்களுக்கு தேவையான உதிரிபாகங்களைத் தயாரித்து தருபவர்கள், ஏற்கனவே இங்கே இருப்பர். அதாவது, ஒருமுகப்படுத்தப்பட்ட வளர்ச்சி ஏற்படுவதற் கான சீரிய முயற்சி இது. இந்த வழித்தடத்தில் இருக்கும் தனியார், பொதுத் துறை நிறுவனங் களை ஒருங்கிணைத்து, அவர்களுடைய கவனத்தை, பாதுகாப்புத் துறையின் தேவை களின் பக்கம் திருப்ப முயற்சி செய்கிறோம். மேலும், உள்நாட்டின் தேவைகளை நிறைவு செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள், அவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படும்.
ஏற்கனவே, ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை, 'இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்' மற்றும், துப்பாக்கி தொழிற்சாலை ஆகியவற்றில், அரசு முதலீடு செய்திருக்கிறது. அவர்கள், இன்னும் தங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, முன்னேற்றம் அடைய வேண்டும். இதெல்லாம் ஒருங்கிணைந்து முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அது, இந்த வழித்தடத்தை உருவாக்குவதன் மூலம் தான் நிறைவேறும்.
ஏற்கனவே இருப்பதை மேம்படுத்த வேண்டும்; அதை, இன்றைய எங்களுடைய ராணுவ தேவைக்கு ஏற்ப, மாற்றியமைக்க வேண்டும். மேலும், தனியார் துறையோடு இணைக்க வேண்டும். அப்போது தான், உற்பத்தியாகும் கருவிகளின் விலை குறையும். தேவையற்ற உபரிச் செலவுகள் இருக்காது. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்தே, இந்தக் காரிடாரை அறிவித்து உள்ளோம்.
இந்தப் பகுதியை, டிபென்ஸ் காரிடாருக்குத் தேர்வு செய்ய, ஏதேனும் சிறப்பு காரணம் உண்டா?
ஏற்கனவே, இந்தப் பகுதிகளில், 'மெஷின் டூல்ஸ்' சப்ளை செய்பவர்கள், 'மெட்டல் பேக்ரி கேஷன்' செய்கிறவர்கள், 'லேசர் வெல்டிங்' செய்பவர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருசிலர், பாதுகாப்புத் துறைக்கு கருவிகள் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருக்க லாம். இப்போது, அவர்களுக்கு, பாதுகாப்புத் துறையில் வாய்ப்பு திறந்து விடப்படுவதால், மேலும் பலர், இதில் ஈடுபடுவர். இதன் வாயிலாக, வெளிநாடுகளில் இருந்து வாங்குவதை விட்டு, இவர்களிடம்இருந்து வாங்குவோம்.
இந்த காரிடாரில் மத்திய அரசே, பாதுகாப்பு தொழிற்சாலையை நிறுவுவதற்கு, ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா?
இல்லை. ஏற்கனவே, இந்தப் பகுதிகளில்,
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவர்களுக்குத் பொதுவான வசதிகள், ஏதேனும் வேண்டு மென்றால், அவற்றை, மத்திய
அரசு நிறுவித் தரும். உதாரணமாக, 'டெஸ்டிங்' வசதி. தனியார் துறையைச்
சேர்ந்தவர்கள், ஒரு கருவியை உருவாக்கினால், அதை அரசாங்கத்திடம் வந்து, பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற வேண்டும்.அதற்கு
அவர்கள், இனி, டில்லிக்கு வர வேண்டியதில்லை. பரிசோதனை செய்வதற்கான வசதியை,
இங்கே ஏற்படுத்தித் தருவோம்.
அதேபோல், எங்கள் பாதுகாப்புத்
துறை அதிகாரிகளை, இங்கே வரவழைத்து, 'அடுத்த, 50 ஆண்டுகளில், எங்களுக்கு
இவையெல்லாம் தேவை; அதை உற்பத்தி செய்து கொடுங்கள்' என்று சொல்ல முடியும்.
பாதுகாப்புத் துறைக்காக, என்னென்ன கருவி களை வாங்கப் போகிறீர்கள் என்பதை வரை யறுத்து சொல்ல வழிகாட்டியாக, ஏதேனும், 'ரிசோர்ஸ் கைடு' உருவாக்கி இருக்கிறீர்களா?
ஒவ்வொரு ஊரிலும், எங்கள் அதிகாரிகள், அங்கே இருக்கக்கூடிய சிறு, குறு தொழில் செய்
பவர்களை அழைத்துப் பேசி வருகின்றனர். அடுத்த, 10ஆண்டுகளுக்கு, எங்களுக்கு இவை யெல்லாம் தேவை என்பதை, அவர்களுக்குச் சொல்கிறோம். அவர்களுடைய தற்போதைய திறன் என்ன; என்ன மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்பதையும், சொல்லத் தயாராக இருக்கிறோம்.
இவற்றையெல்லாம் செய்த பின், 'உங்களால் எவ்வளவு உற்பத்தி செய்ய முடியும் என, சொல்லுங்கள்' என்று கேட்கிறோம். அதை, அவர்கள் தனியாகவும், மற்ற நிறுவனங்களோடு சேர்ந்தும் தயாரித்துக் கொடுக்க முடியும்.
அப்படியானால், இந்தப் பகுதிகளில் தயாரிக்கப்படுவதை வாங்குவதற்கு என்றே, நீங்கள் திட்டம் வைத்துள்ளீர்கள் அல்லவா?
அவர்கள், எங்களுக்கு தேவையானவற்றைத் தயாரித்தால், வாங்கிக் கொள்வோம். எங்கள் தேவை, அது, எந்தத் தரத்தில் இருக்க வேண்டும் என்பதை சொல்லி, அதற்கான பயிற்சிகளையும்
தருகிறோம். பின்னர், ஒரு சோதனை முயற்சி செய்வோம். அந்தச் சோதனையில், அந்த பொருள், வெற்றி பெற்றுவிட்டால், நிச்சயம் வாங்கிக் கொள்வோம். ஆனால், அந்த அளவுக்கு, இங்கேயுள்ள நிறுவனங்களும், தங்கள் தரத்தை உயர்த்த வேண்டும்.
இதில், ஏற்கனவே இந்தத் துறையில் இருப்பவர்கள் தான் ஈடுபட முடியுமா; புதிய ஆர்வலர்களும் பங்கேற்கலாமா?
யார் வேண்டுமானாலும் வரலாம்; யாரையும், நாங்கள் விலக்கி வைக்கவில்லை. எல்லாரும் வர வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை.ஒருசிலர், 'என்னிடம் இந்த தயாரிப்பு திட்டம் இருக்கிறது; ஆனால், எனக்குத் தொழில் துவங்க ஆர்வம் இல்லை' என்றால், எங்களிடம் வாருங்கள்.
உங்கள் திட்டத்தை, நாங்கள் நல்ல உற்பத்தி யாளருக்கு வழங்கி, அதைச் செயல்படுத்த வைப்போம். அந்த நிறுவனத்தோடு, நீங்களும் ஒத்துழையுங்கள். என்ன சாதிக்க வேண்டும் என நினைத்தீர்களோ, அதை உற்பத்தி செய்யுங்கள் என்று சொல்வோம்.
சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன் மாதிரி, தமிழகத்துக்கு நீங்கள் கொண்டு வரும், அடுத்த தொழிற்புரட்சி மற்றும் மாற்றம் என்று, இந்த வழித்தடத்தைச் சொல்லலாமா?
நிச்சயம் மாற்றம் ஏற்படும். தமிழகத்தில், தொழிற்துறையில் பெரிய ஆர்வம் இருக்கிறது. இது, முழுமையாக நகரமயமாகிக் கொண்டிருக்கும், ஒரு மாநிலம். விவசாயம் இருந்தாலும், தமிழகம், ஒரு தொழில் மாநிலம்; உற்பத்தி மாநிலம்.இங்கே, அத்தனை விதமான உற்பத்திகளும் நடைபெறுகின்றன. தனியார் துறையில் பலரும், இப்போது, கப்பல் கட்டுவது, 'ஏரோஸ்பேஸ்' ஆகிய துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், பாதுகாப்புத் தேவைகளுக்குத் தயாரிப்பது என்ற, ஒரு பெரிய வாய்ப்பை, தற்போது திறந்துவிட்டு இருக்கிறோம்.
இதைச் செய்வதற்குத் தேவையான ஆலோசகர்களை, நீங்கள் நியமித்துள்ளீர்களா?
அதைத் தான், ஒவ்வொரு ஊரிலும் செய்திருக்கி றோம். 'நீங்கள் என்ன செய்ய முடியும்; உங்கள் திறன் என்ன' என்பதை, சிறு, குறு நிறுவனங் களைச் சொல்லச் சொல்கிறோம். அதை, எப்படி, எங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப மாற்ற முடியும் என்று, ஆலோசனை சொல்கிறோம்.
இத்தகைய நிறுவனங்களைத் தொடங்க, வங்கி நிதி உதவி, இதர உதவிகளைவழங்குவீர்களா?
ஏற்கெனவே, 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம் இருக்கிறது.
வங்கிகளோடு ஒருங்கிணைப்பு இருக்கிறது. அதன் வாயிலாக, நிதி வசதி செய்து
தருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடு பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு,
இங்கே தொழிற்சாலை தொடங்க, மத்திய அரசு அனுமதி வழங்குமா?
அவர்கள் தாராளமாக வரலாம்; முதலீட்டோடுமட்டும் வரலாம் அல்லது தொழில்நுட்பத் தோடு மட்டும் வரலாம். இங்கே இருக்கும் உள்ளூர் நிறுவனங்களோடு சேரலாம் அல்லது சுயமாகவே தொழில் தொடங்கலாம். எல்லாவற்றுக்கும் வாய்ப்புகளைத் திறந்தே வைத்திருக்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும், இந்தப் பகுதிகளில் உற்பத்தியாகும் ராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு, ஏதேனும் குறிப்பிட்ட இலக்கை, மத்திய அரசு நிர்ணயித்துள்ளதா?
இப்போது, என்னால் இலக்கை நிர்ணயம் செய்ய முடியாது. என்னுடைய தேவையை வேண்டுமானால், இலக்காகச் சொல்ல முடியும். ராணுவத்துக்கு எவ்வளவு தேவை என்பது, எங்களுக்குத் தெரியும். அதை, இங்கே செய்யப்படும் உற்பத்தியிலிருந்தே பெற முடியும் என்றும் கருதுகிறோம். அதற்கான முயற்சியில் தான், தற்போது இறங்கியிருக்கிறோம்.
இந்த காரிடாரில், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நினைக்கிறீர்கள்?
இப்போது கணித்துச் சொல்வது, மிகவும் கடினம்.
ஏப்ரல் மாதம், சென்னையில், பாதுகாப்புத் துறை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து இருக்கிறீர்களே; அதன் முக்கியத்துவம் என்ன; அதிலிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
இத்தகைய தொழில் முயற்சிகள் அனைத்தையும், ஒருங்கிணைப்பதற்காகத் தான், இந்த கண்காட்சி. இதுவரை, வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் தான், தங்கள் தயாரிப்புகளை, இங்கே கண்காட்சிக்கு வைப்பர். முதல் முறையாக, இந்த முறை, நம் இந்திய நிறுவனங்களும், குறிப்பாக சிறு, குறு நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை, இங்கே காட்சிக்கு வைக்கச் சொல்லியிருக்கிறேன். அதற்காக, அவர்களுடைய, 'ஸ்டால்' வாடகையை, பாதியாக குறைத்துள்ளோம்.
தமிழகத்தில், முதல்முறையாக நடைபெறும் ராணுவ கண்காட்சி இது. இதன் வாயிலாக, இந்தியா, ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் திறமை பெற்றது என்பதை, உறுதிப்படுத்த வேண்டும்; இது தான் எங்கள் நோக்கம்.
இந்த காரிடார் உருவாக, மத்திய அரசாங்கம், எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது?
இதற்காக விரிவான, 'திட்ட அறிக்கை' தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், எந்தவிதமான பொது வசதிகள் வேண்டும்; என்ன வசதிகள் வேண்டும் என்பதையெல்லாம் திரட்டச் சொல்லியிருக்கிறேன். அதையெல்லாம் திரட்டிய பின் தான், இதற்கான நிதி ஒதுக்கீடு பற்றி சொல்ல முடியும்.
எப்போது முதல், இந்த காரிடார் செயல்படத் துவங்கும்?
ஏற்கனவே, பாதுகாப்புத் துறையின் தேவைகள் என்னென்ன என்பதை, எங்களுடைய இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறோம். இப்போதே, இந்த வழித்தடத்தில் உள்ள உற்பத்தியாளர்கள், எங்கள் தேவைகளுக்கு ஏற்ப, பொருட்களை தயாரித்து வழங்க முடிந்தால், நாங்கள் வாங்க தயார். இதற்காக, பல ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அடுத்த முதல்வரா?
'தமிழக தேர்தலில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெறுமானால், நீங்கள், முதல்வர் ஆவதற்கு
வாய்ப்பு இருப்பதாக, ஒரு பேச்சு இருக்கிறதே' என்ற கேள்விக்கு, நிர்மலா சீதாராமன்
அளித்த பதில்:இப்போது, எனக்கு கொடுத்திருக் கும் வேலையை ஒழுங்காக செய்தால் போதும் என நினைக்கிறேன்; அவ்வளவு தான்!சிரித்தபடி அவர், இவ்வாறு கூறினார்.
தமிழக அரசு ஒத்துழைக்கிறதா?
தமிழக அரசிடம் இருந்து, என்ன உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?அவர்கள் கொடுக்க வேண்டிய அனுமதிகளை, கொஞ்சம் சீக்கிரமாக கொடுக்க வேண்டும். அதில், எந்தவிதமான இடையூறுகளும் இருக்கக் கூடாது; தடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கீழ்மட்ட அதிகாரிகளை, இன்னும் கொஞ்சம் திறமையோடு செயல்பட வைக்க வேண்டும். கோப்புகளை அதிகப்படுத்தாமல், சீக்கிரம் ஒப்புதல் கொடுக்க வேண்டும்.
மேலும், உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கக் கூடிய, 'ஆர்டர்'களுக்கு நடுவில், எந்தவிதமான இடையூறும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மின்சார சப்ளை தடையின்றி இருக்க வேண்டும் என்று கேட்கிறோம்.
தமிழக அரசு உதவுகிறதா?
இப்போது வரைக்கும், எனக்கு நல்லவித மாகவே ஒத்துழைப்பு தருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (6)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply