புதுடில்லி: ''விவசாயிகளின் வருவாயை பெருக்கும் நோக்கில், விவசாய விளை பொருட் களின் குறைந்தபட்ச ஆதார விலை, உற்பத்தி செலவில், ஒன்றரை மடங்கு இருக்கும்,'' என, டில்லியில் நேற்று நடந்த, விவசாயிகள் சம்மேளனத்தில், பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இது, விவசாயிகள் மத்தியில், அமோக வரவேற்பை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் வருவாயை, 2022க்குள், இரு மடங்காக்க வேண்டும் என்பதில், பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மத்திய அரசின் சமீபத்திய பட்ஜெட்டிலும், விவசாயத்தை ஊக்குவிக்கும் பல அறிவிப்புகள் வெளியாகின.இந்நிலையில், டில்லியில் நேற்று, விவசாய மேம்பாட்டு சம்மேளனத்தில், பிரதமர், நரேந்திர மோடி பங்கேற்றார்.
வருவாய் உயரும்
அப்போது, அவர் பேசியதாவது:விவசாயிகளின் வருவாயை, 2022க்குள், இரு மடங்காக உயர்த்தும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, விவசாய உற்பத்தி பொருட் களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையாக, உற்பத்தி செலவில், ஒன்றரை மடங்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு, விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும். இதனால், நாடு முழுவதும், விவசாய தொழில் செழிக்கும்.
விவசாயிகளின் வருவாய், 2022க்குள், இரு மடங்காக உயர, இது உதவும்.நம் நாட்டில், சமையல் எண்ணெய் தேவைக்கு, வெளிநாடு களில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த நிலையை மாற்ற, எண்ணெய் வித்துக்களை, அதிகளவில் விவசாயிகள் பயிரிட வேண்டும். 2022க்குள், விவசாயத்துக்கு யூரியா உரம்
பயன்படுத்துவதை பாதியாக குறைக்க வேண்டும். அறுவடை முடிந்த பின், விவசாய கழிவுகளை தீயிட்டு எரிக்கும் வழக்கத்திற்கு, விவசாயிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
விவசாய கழிவு களை தீயிட்டு எரிப்பதால்
காற்று மாசு ஏற்படுகிறது. அதனால், சுவாசம் தொடர்பான பல்வேறு நோய்கள்
உண்டாகின்றன. தவிர, நிலத்தின் வளமும் கெட்டுப் போகிறது.இவ்வாறு மோடி
பேசினார்.நேற்றைய நிகழ்ச்சியின் போது, இயற்கைவிவசாயத்துக்கென, 'ஜெய்விக் கேட்டி' என்ற இணையதளத்தை, பிரதமர், மோடி துவக்கி வைத்தார். மேலும், 25 விவசாய அறிவியல் மையங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
உணவு தானிய உற்பத்தியில் சாதனைதமிழகத்திற்கு மத்திய அரசு விருது
சென்னை: உணவு தானிய உற்பத்தியில், 2015 - 16ம் ஆண்டில் சாதனை புரிந்ததற்காக, மத்திய அரசின், 'கிரிஷி கர்மான்' விருதை, தமிழக அரசு பெற்றது.மகசூல் இடைவெளியை குறைத்து, உணவு தானிய உற்பத்தியில், தன்னிறைவு அடைவதற்காக, 2012 - 13ம் ஆண்டில், உணவு தானிய இயக்கம், தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு, உணவு தானிய உற்பத்தியில், அதிக அளவை எட்ட, முன்னோடி தொழில் நுட்பங்களுடன் கூடிய, பல்வேறு கொள்கை முடிவுகளை செயல்படுத்தி வருகிறது. 2010 - 11ம் ஆண்டில், 75.25 லட்சம் டன்னாக இருந்த, மொத்த உணவு தானிய உற்பத்தி, தமிழக அரசின் அணுகுமுறையால், 2011 - 12ல், 101.52 லட்சம் டன் என்ற, உயரிய அளவை அடைந்ததற்காக, மத்திய அரசிடமிருந்து, 'கிரிஷி கர்மான்' விருதை பெற்றது.
இதையடுத்து, அகில இந்திய அளவில், தமிழகத் தின் முன்னோடி நிலையை தக்கவைப்பதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், 2013 - 14ல், 6.14 லட்சம் டன் பயறு வகை உற்பத்தி செய்ததற்காக, இரண்டாம் முறையாக வும்,2014 - 15ல், 40.75 லட்சம் டன், சிறுதானிய உற்பத்தி செய்ததற்காக, மூன்றாம் முறையாகவும், கிரிஷி கர்மான் விருதுகளை பெற்றது.
தொடர்ந்து, '2015 - 16ல், உணவு தானிய உற்பத்தி யில், உயரிய சாதனை படைத்ததற்காக, கிரிஷி கர்மான் விருதுக்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது' என, மத்திய வேளாண் துறை அமைச்சர்,
2017 ஏப்., 12 மற்றும், 2018 பிப்., 27ல், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருந்தார். டில்லியில், நேற்று நடந்த நிகழ்ச்சி யில், தமிழக வேளாண் துறை அமைச்சர், துரைக்கண்ணு, வேளாண் துறை முதன்மை செயலர், ககன்தீப்சிங் பேடி, இயக்குனர், தட்சிணாமூர்த்தி ஆகியோர், 2015-16ம் ஆண்டிற் கான, 'கிரிஷி கர்மான்' விருதை, பிரதமர் மோடியிடமிருந்து பெற்றனர். விருதுடன், ஐந்து கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாத்தி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சாமிநாதன் ஆகியோர், நெல் மற்றும் பயிர் களில், அதிக உற்பத்தி திறன் பெற்றதற் காக, பாராட்டு சான்றிதழுடன், இரண்டு லட்சம் ரூபாய் பரிசுதொகையையும், பிரதமரிடமிருந்து பெற்றனர்.
இரவு, பகல் பாராது உழைக்கும் அரசு
விவசாய துறையில் எழும் சவால்களை எதிர் கொள்ள, அரசு எடுத்து வரும் நடவடிக் கைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை தீர்க்க, பல சிறப்பு திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது.
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, உற்பத்தி பொருட்களின் விற்பனை முறையில், சீர்திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. விவசாயிகளுக்கு, சமீபத்திய விதைகள், மின்சாரம் கிடைக்க, மத்திய அரசு, இரவும், பகலும் உழைத்து வருகிறது. உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவும், விவசாய பொருட்களை சந்தைகளுக்கு எடுத்து செல்லவும், தேவை யான உதவிகளை அரசு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து