சென்னை : சட்டசபையில் நேற்று, 2018 - 19ம் நிதி ஆண்டுக்கான, தமிழக பட்ஜெட்டை, துணை முதல்வர், பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில், அரசின் வருவாய் பற்றாக்குறை, 17 ஆயிரத்து, 490 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதால், கடன் சுமையும், 3.56 லட்சம் கோடி ரூபாயாக உயர்கிறது.
தமிழக அரசின், 2018 - 19ம் ஆண்டிற்கான பட்ஜெட் அம்சங்கள்:
சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள, அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை கணக்கிட்டு, 2018 - 19ம் நிதி ஆண்டிற்கான, பட்ஜெட் மதிப்பீடுகளில், சம்பளம் மற்றும் படிகளுக்காக, 52 ஆயிரத்து, 171 கோடி ரூபாய்; ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வுகாலப் பலன்களுக்காக, 25 ஆயிரத்து, 362 கோடி ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.1.76 லட்சம்
எனவே, 2018 - 19ம் ஆண்டில், அரசின் மொத்த வருவாய் வரவு, 1.76 லட்சம் கோடியாகவும், வருவாய் செலவினங்கள், 1.93 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும். வருவாய் பற்றாக்குறை, 17 ஆயிரத்து, 490 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மூலதன செலவினம், 28 ஆயிரத்து, 283 கோடியாகவும், நிதி பற்றாக்குறை, 44 ஆயிரத்து, 481 கோடி ரூபாயாகவும் இருக்கும். இது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 2.79 சதவீதம். அனுமதிக்கப்பட்ட நிகரக் கடன், 47 ஆயிரத்து, 888 கோடி ரூபாயாக இருந்தாலும், வரும் நிதியாண்டில், 43 ஆயிரத்து, 962 கோடி ரூபாய் வரை மட்டும், கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனால், 2019 மார்ச், 31ல், அரசின் நிகர நிலுவைக் கடன், 3.56 லட்சம் கோடி ரூபாயாக உயரும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், இந்த நிலுவைக் கடன் அளவு, 22.29 சதவீதமாகும். எனினும், அனுமதிக்கப்பட்ட, 25 சதவீத அளவிற்கு உட்பட்டே, கடன் அளவு இருக்கும்.நலத் திட்டங்களை செயல்படுத்துவதில், மக்களுக்கான எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. நிதி ஆதாரங்களிலும், நிதி நிலையிலும், சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனினும், கரு மேகங்களுக்கு இடையே தென்படும், வெள்ளிக்கீற்று மின்னலைப் போன்று, பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.
'உதய்' திட்டத்தாலும், ஊதிய திருத்தங்களாலும் ஏற்பட்ட, கூடுதல் செலவினத்தால் உருவான, வருவாய் பற்றாக்குறை, வரும் நிதியாண்டுகளில் படிப்படியாக குறையும். இதன் விளைவாக, கடன் அளவு குறைக்கப்பட்டு, நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்கள் கூடுதலாக கிடைக்கும். இதனால், மாநிலத்தின் பொருளாதார மேம்பாடு துரிதப்படுத்தப்பட்டு, வளமான தமிழகம் என்ற குறிக்கோளை, நாம் எட்ட இயலும். இவ்வாறு பட்ஜெட்டில்தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., அரசு தொடர்ந்து, ஆறாவது முறையாக, பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. 2014 - 15ம் நிதியாண்டு கணக்குகளின்படி, தமிழகத்தில், 6,407 கோடி ரூபாய், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அடுத்த நிதியாண்டில், திருத்திய மதிப்பீடுகளின்படி, 9,481 கோடி ரூபாயாக இருந்தது. பின், 2016 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட, இடைக்கால பட்ஜெட்டில், 9,154 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டது; ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்ட, இறுதி பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 15 ஆயிரத்து, 854 கோடி ரூபாயாக உயர்ந்தது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், பற்றாக்குறை, 15 ஆயிரத்து, 930 கோடி ரூபாயாக இருக்கும் என, கடந்த ஆண்டில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, சமர்ப்பிக்கப்பட்டுள்ள, வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 17 ஆயிரத்து, 490 கோடி ரூபாய். வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வருவது போல, கடன் தொகையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது, அரசின் கடன், 3.14 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், 2019 மார்ச், 31ல், கடன், 3.55 லட்சம் கோடியாக இருக்கும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. கடனுக்காக, 29 ஆயிரத்து, 624 கோடி ரூபாய், வட்டியும் செலுத்த வேண்டி உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2+ 40)
Reply
Reply