கோவை : ''தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இதில், சந்தேகம் இல்லை,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் கமல் கூறியதாவது: குரங்கணி காட்டுத் தீ விபத்து, யாரும் எதிர்பாராதது. அரசு, உரிய நடவடிக்கை எடுத்து உள்ளது. விமர்சிப்பது சரியானது அல்ல. காணாமல் போனவர்களை, கண்டுபிடிப்பர் என, நம்புகிறேன்.
தற்போது நிகழ்ந்த விபத்தை, ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனிமேல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள்,
வனப்பகுதியில் அஜாக்கிரதையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். பீடி, மதுபாட்டில்களை வீசுவது, வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் ஆபத்தாக முடிகிறது.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இதில், சந்தேகம் இல்லை. விபத்துக்கும், குற்றங்களுக்கும் தொடர்பில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான தீர்வு கிடைக்கவேண்டும்.
விவசாயிகளுக்கும், தமிழர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள், தண்ணீரை சேகரிக்கவேண்டும்; சேமிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., தவறான முடிவு எனச் சொல்லவில்லை; செயல்படுத்தப்பட்ட முறை தான் சரியில்லை.நல்ல திட்டங்களை வேண்டாம் என்பதை விட, எப்படி அமல்படுத்த வேண்டும் எனக் கூற, பல அறிஞர்கள் இருக்கின்றனர். அதை செவிமடுத்தால்போதும்.
இரு நாட்கள் சுற்றுப்பயணத்தில், நான் மகிழ்ந்து போனேன் என்பதை விட, என் மீது இவ்வளவுபாசமா என, நெகிழ்ந்து போனேன் என்பது தான் உண்மை.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி: மத்திய, பா.ஜ., அரசை, நான் விமர்சிக்காமல் இல்லை; அவசியம் வரும்போது விமர்சிப்பேன். விமர்சனம் என்பது, ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும். எனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் தான், அரசியலுக்கு வந்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறார். அதற்கு, நான் பதிலளிக்க விரும்பவில்லை; மக்கள் பதில் சொல்வர். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2)
Reply
Reply