புதுடில்லி : வங்கிக் கணக்குகள், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், இறுதி தீர்ப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனால், மானியங்கள், பலன்கள் கிடைக்கும் திட்டங்கள் தவிர்த்து, மற்றவற்றுடன் ஆதாரை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.
சமையல், 'காஸ்' மானியம் பெற, வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக உள்ளது.
பல வழக்குகள்
மேலும், 'வங்கி கணக்குகள், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவற்றுடன், ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும்' என, மத்திய அரசு கூறி வருகிறது. 'மொபைல் போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும்' என, மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூறிவருகின்றன.
'இம்மாதம், 31க்குள், இந்த சேவைகளை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்' என, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அரசு திட்டங்கள், வங்கி கணக்குகள், மொபைல் போன் ஆகியவற்றுடன் ஆதாரை இணைக்கும்படி கட்டாயப்படுத்துவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
'ஆதாரை இணைக்க சொல்வது சட்டப்படி செல்லுபடி ஆகுமா' என்ற கேள்வியை, மனுதாரர்கள் முன்வைத்துள்ளனர். இந்த வழக்குகளை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, எம்.எம்.கன்வில்கர், சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விருந்தா குரோவர், தத்கல் திட்டத்தில், பாஸ்போர்ட் வாங்கு வதற்கும், ஆதாரை கட்டாயமாக்கி புதிய விதி அமல்படுத்தப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பாஸ்போர்ட் ரத்து
மூத்த வழக்கறிஞர், அரவிந்த் டி.பதார் வாதிடுகையில், ''வழக்கறிஞர் விருந்தா குரோவரின் பாஸ்போர்ட், 2020 வரை செல்லத்தக்கது. ஆனால், கூடுதல் புத்தகம் இல்லாததால், அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. ''வங்கதேசத்தில் ஒரு மாநாட்டில் பங்கேற்பதற்காக, பாஸ்போர்ட் பெற, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்றபோது, ஆதார் அட்டை இல்லாததால், அவருக்கு பாஸ்போர்ட் தரப்படவில்லை,'' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ''சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள், சேவைகள், மானியங்கள் பெற, ஆதார் அவசியமாக்கப்பட வேண்டும்,'' என்றார்.
இறுதி தீர்ப்பு
பல தரப்பு வாதங்களுக்கு பின், உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு: வங்கி கணக்குகள், மொபைல் போன், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைப்பது, நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை, கட்டாயம் கிடையாது.
மானியங்கள், பயன்கள் கிடைக்கும் திட்டங்கள் தவிர்த்து, மற்ற அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மொபைல் போன் சந்தாதாரர்கள், ஆதார் எண் அளித்தல், இ - கே.ஒய்.சி., எனப்படும், மின்னணு வியல் முறையில், வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை அளித்தல் ஆகியவற்றுக்கான அவகாசம், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது.
தத்கல் திட்டத்தின் கீழ், பாஸ்போர்ட் பெற, ஆதார் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள், இறுதி தீர்ப்பு வரும் வரை பொருந்தாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், மனுதாரர்கள், புட்டாசாமி உள்ளிட்டோர் வாதிடுகையில், 'அரசியல் சாசன அமர்வு, முந்தைய உத்தரவுகளில் கூறியபடி, மத்திய, மாநில அரசுகளின், ஆறு திட்டங்களுக்கு மட்டுமே, ஆதார் அட்டைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 'நீதிமன்ற உத்தரவுகளை, மத்திய அரசு கண்டிப்பாக பின்பற்றும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சுய விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே, ஆதார் எண் தரலாம் என, உத்தரவிட வேண்டும்' என்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து