முட்டுக்கட்டை விலகி, அலுவல்கள் சுமுகமாக தொடர்வதற்கான அறிகுறிகள் தென்படாததால், திட்டமிட்ட தேதிக்கு முன்பே, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிய வாய்ப்பு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வுக்காக, 5ம் தேதி, பார்லி., கூடியது. ஆனால்,கடந்த வாரம் முழுவதும், சபை கூடுவதும், ஒத்தி வைப்பதுமாக காட்சிகள் இருந்தன.பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பிரச்னைக்காக, காங்கிரசும், திரிணமுலும் இணைந்துஅமளியில் ஈடுபடுகின்றன. இருப்பினும், பல்வேறு மாநில கட்சிகளின் ஆவேசம் தான், இரு சபைகளிலும் அதிகமாக உள்ளது.
மாநில சிறப்பு அந்தஸ்து கோரி, ஆந்திர, எம்.பி.,க்களும், காவிரி பிரச்னைக்காக தமிழக, எம்.பி.,க்களும், அமளியில் ஈடுபடுகின்றனர்.வார விடுமுறைக்கு
பின், நேற்று, பார்லி., மீண்டும் கூடிய போதும், காட்சிகள் மாறவில்லை. ஆர்ப்பாட்டம், அமளி என தொடரவே, லோக்சபாவும், ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டன.
இது போன்ற தொடர் அமளி இருந்தால், பிரச்னைக்கு தீர்வு காண, அரசு தரப்பும், எதிர்க்கட்சி தரப்பும், திரைமறைவில் முயற்சிகள் மேற்கொள்வது வழக்கம். ஆனால், அதுபோன்ற எந்த முயற்சிகளுடன், எதிர்க்கட்சிகளை, அரசு தரப்பு இதுவரை அணுகவில்லை. எதிர்க்கட்சிகளின் பிடிவாதமும் தொடர்வதால், சுமுகமான முடிவு எட்டப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை.
இதனால், 'சமாதான முயற்சிகளில் இறங்காமல், முடிந்த வரை, குரல் ஓட்டெடுப்பு மூலமே, நிதி மசோதாவை நிறைவேற்றி, முக்கிய மசோதாக்களுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கலாமா' என்ற யோசனை, பா.ஜ.,வுக்கு எழுந்துள்ளது.
திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி, ஏப்., 6 வரை நடத்த வேண்டும். ஆனால், அமளி காரணமாக, முன்கூட்டியே, கூட்டத்தொடரை முடித்துக் கொள்வதற்கான வாய்ப்பு கள் அதிகம் உள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், ஆறாவது நாளாக நேற்றும், ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். நிருபர்களிடம் பேசிய, பார்லிமென்ட், அ.தி.மு.க., குழு தலைவர், வேணுகோபால், ''சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கும் வகையில், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மத்திய அரசு, நியாயம் தவறுமானால், எங்கள் போராட்டம் மேலும் அதிகரிக்கும்,'' என்றார். இவர்களுடன், ஒரே ஒரு நாள் மட்டும் இணைந்து, கோஷங்கள் எழுப்பிய, தி.மு.க., - எம்.பி.,க்கள், அதன்பின், காந்தி சிலைக்கு வருவதில்லை. தினமும், சபைக்குள் மட்டும், அமளியில் இணைந்து கொள்கின்றனர்.
- நமது டில்லி நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து