''ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்குங்கள்,'' என, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில், தமிழகம் மற்றும் உ.பி.,யில், 'காரிடார்' எனப்படும், தொழிற்சாலை வழித்தடம் அமைக்கப்படும் என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, இந்த சிறப்பு ராணுவத் தொழிற்சாலை வழித்தடம் அமைப்பது குறித்த, நாட்டின் முதல் ராணுவக் கண்காட்சி, சென்னையில், அடுத்த மாதம் நடக்க உள்ளது.
இந்நிலையில், ராணுவ தளவாடங்களை, உள்நாட்டில் உற்பத்தி செய்வது குறித்த கருத்தரங்கம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, ராணுவ ஆயுதங்கள் தயாரிக்கும், இரண்டு தொழிற்சாலை வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.
உ.பி.,யில், ஆக்ரா, அலிகார், லக்னோ, கான்பூர், ஜான்சி, சித்திரகூட் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், ஒரு வழித்தடம் அமைய உள்ளது. தமிழகத்தில், சென்னை, ஓசூர், கோவை, சேலம், திருச்சியை இணைக்கும் வகையில், மற்றொரு வழித்தடம் அமைய உள்ளது. ஆயுத உற்பத்தியின் மையமாக, நம் நாட்டை மாற்ற வேண்டும். அதற்கு, இத்துறையில், தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்.
அதற்கேற்ற வகையில், தனியார் நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத்துறையில் தற்போது, 37 லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆயுதத்தயாரிப்பில், அதிக அளவிலான நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.
உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பு உற்பத்தியை அதிகரிப்பது, இத்துறையை மேம்படுத்துவது போன்றவை குறித்து, ஏற்கனவே, இதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும், புதிதாக ஈடுபட ஆர்வமாக உள்ள நிறுவனங்களும், தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம்.புதிய தொழில் வழிப்பாதை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து