போடி : தேனி மாவட்டம், போடி அருகே, குரங்கணி காட்டுப் பகுதியில், மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணியர்,காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில், ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர், செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து பலியாயினர். படுகாயமடைந்த இரண்டு இளம்பெண், மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த, 27 பேர், ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த, 12 என, மொத்தம், 39 பேர், கேரள மாநிலம், மூணாறுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். அங்கிருந்து, சூரியநெல்லி வழியாக, கொழுக்குமலை தேயிலை எஸ்டேட்டிற்கு, மலையேற்ற பயிற்சி செல்லதிட்டமிட்டனர்.
'அவ்வழியாக சென்றால், கேரள வனத்துறையிடம் கட்டணம் செலுத்த வேண்டும். தேனி மாவட்டம், குரங்கணி வழியாக, கட்டணமின்றி செல்லலாம்' என, சென்னையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் கூறியதால், மூணாறில் இருந்து, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு குரங்கணி வந்தனர்.
புற்களில் பரவிய தீ
செங்குத்தான, ஆபத்துமிக்க காட்டிற்குள் செல்ல, வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். 'நீண்ட துாரத்தில் இருந்து வருவதால் அனுமதிக்க வேண்டும்' என, ராஜேஷ் கேட்டு உள்ளார்.'கவனிப்புக்கு' பின், 39 பேரையும் காட்டிற்குள், வனத்துறையினர் அனுமதித்தனர். காலை, 8:30 மணிக்கு கொழுக்குமலைக்கு மலையேற துவங்கினர். குரங்கணியில் இருந்து, 7 கி.மீ., வரை சென்றனர். கொழுக்குமலை எஸ்டேட் நெருங்கி கொண்டிருந்தது.
மதியம், 1:00 மணிக்கு, மலை உச்சியில், ஒத்தமரம் எனும் பகுதிக்கு பின்புறம், 5 அடி உயரமுள்ள காட்டுப்புற்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. திடீரென சுற்றுலா பயணியரை, தீவு போல் தீ சுற்றி வளைத்தது. செய்வதறியாது தவித்த அவர்கள், சிதறி ஓடினர்.காட்டுத்தீயில் சிக்கியோரின் ஆடைகளில் தீப்பிடித்தது. உயிர் பிழைக்க, வழி தெரியாமல் ஓடிய போது, செங்குத்தான பள்ளத்தில், ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் விழுந்தனர்.
ஏற்கனவே தீயில் பாதி உடல் வெந்திருந்ததால், பள்ளத்தில் தவறி விழுந்ததில், ஒன்பது பேரும் உடல் சிதறி பலியாயினர்.தீ விபத்து குறித்து, குரங்கணி கிராமத்தினருக்கு மதியம், 2:00 மணிக்கு தெரிந்தது. இளைஞர்கள் சிலர் அங்கு சென்று, தீயில் கருகி உயிருக்கு போராடியவர்களை மீட்டனர்.தீயணைப்பு இணை இயக்குனர் சரவணகுமார் தலைமையில் தீயணைப்புக் குழுவினர், 78 பேர், பல பிரிவு காவல் மற்றும் வனத் துறையினர் இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 27 பேரை, 'டோலி' கட்டி மீட்டனர்.
இவர்கள் மதுரை, தேனி அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், சென்னையைச் சேர்ந்த நிஷா, 27, என்ற பெண்ணும், ஈரோட்டை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணும் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்; இதனால், பலி, 11 ஆக உயர்ந்தது.
உடல்கள் மீட்பு
செங்குத்தான பள்ளத்தாக்கில், ஒன்பது பேர் உடல்கள் கிடப்பதை, மீட்புக் குழுவினர் நேற்று காலையில் உறுதி செய்தனர். அப்பகுதிக்கு செல்வது பெரும் சவாலாக இருந்தது. கிராமத்தினர் உதவியுடன், தீயணைப்பு குழுவினர், கயிறு கட்டி பள்ளத்தாக்கில் இறங்கினர்.
நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின், காலை, 11:00 மணிக்கு உடல்களை கயிற்றில் கட்டி துாக்கினர். உடல்கள், விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்களில், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, காலை, 11:30 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அமைச்சர்கள் முகாம்
தேனி மாவட்டம், பெரியகுளத்தில், நேற்று முன்தினம் மாலையில் நடந்த, ஜெ., பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சீனிவாசன், உதயகுமார் ஆகியோர், தீ விபத்து குறித்து தெரிந்தவுடன், போடிக்கு சென்றனர்.இரவு முழுவதும் அங்கு முகாமிட்டு, மீட்பு பணியை துரிதப்படுத்தினர். 30 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், 27 பேரை உயிருடன் மீட்க முடிந்தது.
தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் மலையில், மேலும் தீ பரவாமல் தடுக்க, ஹெலிகாப்டர் மூலம் ரசாயன பவுடர் தெளிக்கப்பட்டது. இதனால், விடிவதற்குள் தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
பலியானவர்கள் விபரம்
1. ஈரோடு, முத்துக்குமார் மகள் திவ்யா, 25.
2. ஈரோடு, கவுந்தப்பாடி, நடராஜன் மகன் விவேக், 32.
3. ஈரோடு, கவுந்தப்பாடி, தங்கராஜ் மகன் தமிழ்செல்வம், 26.
4. கும்பகோணம், கிருஷ்ணமூர்த்தி மகள் அகிலா, 25.
5. மதுரை, புதுவிளாங்குடி, திருஞானசம்பந்தம் மகள் ஹேமலதா, 30.
6. கடலுார், திட்டக்குடி, செல்வராஜ் மகள் சுபா, 28.
7. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், பாலாஜி மனைவி புனிதா, 26.
8. சென்னை, பூந்தமல்லி, ரகுராமன் மகன் அருண்பிரபாகரன், 35.
9. கன்னியாகுமரி, உண்ணாமலைக்கடை, தாமோதரன் மகன் விபின், 30.
10. சென்னை, அருள் ஒளி மகள் நிஷா, 27.
பலியான விவேக் மனைவி திவ்யா, 25, திருப்பூர் ராஜசேகர், 29, திருப்பூர் சக்திகலா, 40, மகள்கள் பாவனா, 12, சாதனா, 11, ஈரோடு செந்தில்குமார் மகள் நேகா, 9, சென்னை சகானா, 20, சென்னை வடபழனி மோகன்ராஜ் மகள் நிவேதா, 23, காஞ்சிபுரம் முடிச்சூர் ரவி மகள் விஜயலட்சுமி, 27. சென்னை வேளச்சேரி பியூஷ் மனைவி பூஜா, 27, சென்னை மடிப்பாக்கம் தனபால் மனைவி மோனிஷா, 30, தாம்பரம் அனுவித்யா, 25, போரூர் சந்திரன் மனைவி இலக்கியா, 29, ஈரோடு சென்னிமலை தண்டபாணி மகன் பிரபு, 30. ஈரோடு சபிதா, 35, சென்னை தினேஷ் மனைவி சுவேதா, 28, ஈரோடு கவுண்டம்பாளையம் கிரி மகன் கண்ணன், 26, சேலம் தேவி, 28, சென்னை ராஜன் மகள் திவ்யா பிரக்ருதி, 24, உடுமலைப்பேட்டை முருகபூபதி மகள் சிவசங்கரி, 25, ஈரோடு ராமர் மகன் சதீஷ்குமார், 29, சென்னை சூரியநாராயணன் மகள் பார்கவி, 23, சென்னை இளங்கோவன் மனைவி ஜெயஸ்ரீ, 32, கிருஷ்ணமூர்த்தி மகள் சாய்வசுமதி, 20, கோவை விஸ்வநாதன் மகள் திவ்யா, 27, கேரளாவைச் சேர்ந்த மினா ஜார்ஜ்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (17+ 95)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply