சசிகலா அக்கா மகன் தினகரன், வரும், 15ல், மதுரை, மேலுாரில் புதிய கட்சியை துவக்க உள்ள நிலையில், அக்கட்சியில், முக்கிய பொறுப்புகள் கேட்டு, சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள் முரண்டு பிடித்து வருகின்றன. அத்துடன், அ.தி.மு.க.,விலிருந்து, தினகரனை நம்பி வந்த, 'மாஜி' அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளும், பதவி கேட்டு கெடுபிடி செய்கின்றனர். கட்சி துவக்கத்திற்கான, கால்கோள் விழா நேற்று நடந்த நிலையில், துவங்கியுள்ள களேபரங்கள், தினகரன் தரப்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
'தமிழகத்தில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், தங்கள் அணிக்கு, 'குக்கர்' சின்னம் வழங்க வேண்டும். 'மேலும், அம்மா அண்ணா தி.மு.க., - எம்.ஜி.ஆர்., அம்மா தி.மு.க., - எம்.ஜி.ஆர்., அம்மா தி.க., ஆகிய, மூன்று கட்சி பெயர்களில் ஏதேனும் ஒன்றை, தற்காலிகமாக பயன்படுத்த அனுமதிக்கும் படி, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆலோசனை
இந்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம், 'தினகரன் கோரியபடி, குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவர் விருப்பப்படி கட்சி பெயரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மூன்று வாரத்திற்குள், இதற்கான உத்தரவை, தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
இதையடுத்து, புதிய கட்சி துவக்கம் குறித்து, தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தினகரன், 'எம்.ஜி.ஆர்., அம்மா தி.மு.க.,' என்ற பெயரை பயன்படுத்துவது, எம்.ஜி.ஆர்., - ஜெ., உருவப்படம் இடம் பெறும் வகையில், கட்சி கொடியை அமைப்பது என, முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், குக்கர் சின்னம் கிடைத்தது, தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி என, தினகரனின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த வெற்றியை, பூத் கமிட்டிகள் வாரியாக கொண்டாடவும், குக்கர் சின்னத்தை பொதுமக்களிடம் பிரபலப்படுத்தவும், தினகரன் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் புதிய கட்சியின் துவக்க விழா, வரும், 15ல், மதுரை, மேலுாரில் நடக்கும் என, தினகரன் அறிவித்துள்ளார். இதற்கான, கால் கோள் எனப்படும், பந்தல் கால் நடும் விழா, நேற்று நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர்கள், பழனியப்பன், செந்தில் பாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மேலுார் சாமி, தொட்டியம் ராஜசேகர், முன்னாள் மேயர், சாருபாலா தொண்டைமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சி துவக்க விழா அன்று, ஒரு லட்சம் பேரை திரட்டவும், தன் ஆதரவு மாவட்ட செயலர்களுக்கு, தினகரன் உத்தரவிட்டு உள்ளார்.இதற்கிடையே, புதிய கட்சியின் அவைத்தலைவராக, நாமக்கல்லைச் சேர்ந்தஅன்பழகன், பொதுச்செயலராக, சசிகலா, துணைப் பொதுச்செயலராக, தினகரன் ஆகியோர், துவக்க விழா அன்று அறிவிக்கப்பட உள்ளனர்.
இருப்பினும், சசிகலாவின் தம்பி திவாகரன், அவரது மகன் ஜெயானந்த், இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியா உட்பட, மன்னார்குடி உறவுகள் யாருக்கும், கட்சியில் பதவி வழங்க, தினகரன் விரும்பவில்லை.
ஆனால், அவர்களோ, 'முக்கிய பதவிகள் வேண்டும்' என கேட்டு, முரண்டு பிடிக்கின்றனர். இது தவிர, தினகரன் அணியில் உள்ள, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரும், 'உங்களை நம்பி வந்தோம்; முக்கிய பதவி கொடுங்கள்' என, தினகரனிடம், கெடுபிடியாக கூறி வருகின்றனர்.
'குக்கர்' சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் கட்சியை துவக்க உள்ள தினகரனுக்கு, கால்கோள் விழா தான் நடந்துள்ளது என்ற அளவிலேயே, களேபரம் துவங்கியுள்ளது, பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், அமைச்சர் ஜெயகுமார், நேற்று கூறியதாவது: யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம். அதில், எங்களுக்கு மாறுப்பட்ட கருத்து கிடையாது. தினகரன் கட்சி போனியாகாது. கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என, அவர் தேடுகிறார். அவருக்கு வேண்டுமானால், ஒரு யோசனை சொல்கிறேன். 'டோக்கன் முன்னேற்ற கழகம்' அல்லது, 'தில்லுமுல்லு தினகரன் முன்னேற்ற கழகம்' என்ற, இரு பெயர்களில், ஒரு பெயரை தேர்வு செய்யலாம். பானை, சட்டி, தவா, கரண்டி போன்ற சின்னங்களில், ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம். மகள் பாதுகாப்பு கருதி, கமலிடம் இருந்து பிரிந்ததாக, கவுதமி கூறியதில் பல அர்த்தங்கள் உள்ளன. ரஜினி மலையேறி விட்டதால், கீழே என்ன நடக்கிறது என, அவருக்கு தெரியாது. 'ராஜிவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம்' என, காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறி இருக்கிறார். இலங்கையில், தமிழ் இனம் அழிக்கப்பட்டதற்கு, காங்கிரசும், கூட்டணியில் இருந்த, தி.மு.க.,வுமே காரணம். இப்போது, அரசியலுக்காக, ராகுல் இப்படி பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (3)
Reply
Reply
Reply