புதுடில்லி : சீனா, ராணுவப் பலத்தை அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஈடு கொடுக்கும் வகையில், நம் ராணுவத் தளவாடங்கள் மற்றும் வீரர்களை விரைவாக, ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு நகர்த்திச் செல்லும் பணியை, ரயில்வேயும்,ராணுவமும் ஒருங்கிணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.
அண்டை நாடான சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. சீனக் கடல் பகுதியிலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது; இது,இந்தியா உட்பட, அண்டை நாடுகளை கவலை அடையச் செய்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில், ரயில்வேயின் உதவியை பெற, நம் ராணுவம் முடிவு செய்தது. இதையடுத்து, ராணுவத் தளவாடங்கள், வீரர்களை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு அதிவிரைவாக நகர்த்திச் செல்லும் பணிகளை, ரயில்வேயும், ராணுவமும் ஒருங்கிணைந்து செயல்படுத்தும்.
இந்த திட்டத்தால், பாக்., எல்லையை ஒட்டிய மேற்கு பகுதி, சீன எல்லையை ஒட்டிய கிழக்கு பகுதி இடையே, நம் ராணுவத் தளவாடங்கள், போர் வீரர்களை,
குறுகிய நேரத்தில், ரயில்கள் மூலம் நகர்த்த முடியும். ராணுவத் தளவாடங்களை எடுத்துச் செல்லும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், பிரத்யேக கட்டமைப்புகளை ரயில்வே உருவாக்கி வருகிறது.
ராணுவ டாங்குகள், 'ஹோவிட்சர்' வகை பீரங்கிகள், காலாட்படைக்கு தேவையான ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில்களில், எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேசத்தின் பலுக்பாங், நாகாலாந்தின் திமாபூர், அசாமின் சிலபதார், மிசாமாரி, முர்கோங்செலெக் ஆகிய இடங்களில், இத்தகைய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து, ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராணுவத் தளவாடங்களை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில், தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான சோதனை ஓட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், எந்த சூழலையும் விரைவில் எதிர்கொள்ளும் திறன், நம் ராணுவத்திற்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவத்தால் கற்ற பாடம்
கடந்த, 2001ல், பாக்.,கில் இருந்து, டில்லிக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், பார்லிமென்டில் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாக்.,கிற்கு பாடம் கற்பிக்க, மேற்கு முன்கள பகுதியில், 'ஆபரேஷன் பராக்ரம்' என்ற பெயரில், வீரர்களை திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், ராணுவ வீரர்களையும், தளவாடங் களையும் திரட்டும் பணியை முடிக்க, ஒரு மாதத்துக்கு மேல் ஆனது. இந்த தாமதத்தை பயன்படுத்தி, பாக்., ராணுவம், தன் பகுதியில் தயார் நிலையை அடைந்தது. இதற்கிடையே, அமெரிக்கா தலைமையிலான, சர்வதேச நாடுகள், இந்தியா - பாக்., இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் குறுக்கிட்டன. அந்த அனுபவத்தால் கற்ற பாடமாக, எந்த சூழ்நிலையிலும், குறுகிய நேரத்தில் படைகளை திரட்டி, தயார் நிலையை அடைய, நம் ராணுவம் திட்டமிட்டது.
நம் ராணுவம், ஆண்டுதோறும் போர் வீரர்களையும், ராணுவ டாங்குகள், வெடி பொருட்கள் உள்ளிட்ட தளவாடங்களையும், வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல, 800 ரயில்களை பயன்படுத்தி வருகிறது. இதற்கு, ஆண்டுதோறும், 2,000 கோடி ரூபாயை, ரயில்வேக்கு, ராணுவம் செலுத்தி வருகிறது. இதற்கான கட்டமைப்புகளை உருவாக்க, சில இடங்களில், தன் சொந்த நிதியை ரயில்வே பயன்படுத்தி வருகிறது. ராணுவத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, 5,000 ரயில் வாகனங்களை கண்காணிக்க, ரயில்வேயின் இணையதள கண்காணிப்பு தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து