புதுடில்லி : எந்த மாநிலத்துக்கும் இனி, சிறப்பு அந்தஸ்து கிடைப்பதற்கு வாய்ப்பில்லை; ஏனெனில், 14வது நிதி கமிஷன், சிறப்பு அந்தஸ்து வழங்குவது பற்றி எதுவும் பரிந்துரைக்கவில்லை. அதற்கு பதிலாக, மத்திய அரசின் நிகர வருவாயில், மாநில அரசின் பங்கை, 32 சதவீதத்திலிருந்து, 42 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.
பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் மத்திய அமைச்சரவையிலிருந்து, தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது, தேசிய அரசியலில் சல சலப்பை ஏற்படுத்திஉள்ளது. தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை காரணமாக கூறித் தான், இந்த அதிரடி முடிவை, தெலுங்கு தேசம் எடுத்தது.
வாய்ப்பில்லை
மத்திய அரசிடமிருந்து, அதிக நிதி ஆதாயம் பெறுவது தான், சிறப்பு அந்தஸ்து. இதுவரை, பல மாநிலங்கள், மத்தியில் ஆளும் கட்சிகளிடம், தங்களுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, இந்த சிறப்பு அந்தஸ்தை பெற்று வந்தன.
ஆனால், தற்போது ஆந்திர மாநிலத்துக்கு, இந்த அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில், இனி எந்த மாநிலத்துக்கும், சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பில்லை.
இது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: கூட்டாட்சியை அடிப்படையாக வைத்து செயல்படும் ஜனநாயகத்தில், நிதி வளங்களை பங்கிட்டு கொள்வதில் தான், வெற்றி அடங்கியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட அரசுகள் உள்ள நாட்டில், கூட்டாட்சி கொள்கை அவசியமாகிறது.
'நிதி நிலையில், மாநிலங்களுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்கக் கூடாது' என, அரசியல் சட்டத்தின், 280 மற்றும், 281வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி தான், நிதி கமிஷன் துவங்கப்பட்டது. மாநிலங்களுக்கு வருவாயை பகிர்ந்தளிப்பது பற்றி, நிதி கமிஷன் பரிந்துரைக்கும்.
பிராந்திய தேவைகள்
வரி வசூல் மற்றும் வருவாயை, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலும், வளர்ச்சி, வளம் மற்றும் பிராந்திய தேவைகளை கருத்தில் வைத்தும், மாநிலங்களுக்கு இடையிலும் பிரிப்பது பற்றி, நிதி கமிஷன் பரிந்துரைக்கும். இந்நிலையில், 14 வது நிதி கமிஷன், சிறப்பு மாநில அந்தஸ்து என அறிவிக்காமல், சிறப்பு நிதி ஒதுக்கலாம் என தெரிவித்துள்ளது.
இது பற்றி, நிதி கமிஷன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரி வருவாயை பகிர்ந்து கொள்வது தான், மாநிலங்களுக்கு நிதி வழங்குவதற்கான முக்கியமான வழி; மேலும், வரியை பிரிப்பதற்கு முன், அரசுகளின் அனைத்து வருவாயையும், மொத்தமாக சேர்க்க வேண்டும். அதன்பின் தான், மாநிலங்களுக்கு பிரிக்கவேண்டும்.
இந்த நிகர வருவாயில் இருந்து, மாநில அரசுகளுக்கான பங்கை, 32 சதவீதத்திலிருந்து, 42 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம், ஒரு மாநிலத்துக்கு கூடுதல் சலுகை காட்டப்படுவது நிறுத்தப்படும். இதில் அரசியல் தலையீடும் இருக்காது.
சில மாநிலங்களின் தேவையை கருதி, அதற்கு சிறப்பு நிதி ஒதுக்கலாம்.இவ்வாறு நிதி கமிஷன் தெரிவித்துள்ளது.
நிதி கமிஷன் இப்படி தெரிவித்துள்ளதால் தான், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கவில்லை. எனவே இனி, எந்த மாநிலமும், சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில், மத்திய அரசின் நிதியில் குளிர் காய முடியாது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறப்பு மாநில அந்தஸ்து?
ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய திட்டக்குழு, நிதி ஒதுக்குகிறது; அதில், 70 சதவீதம் மானியமாகவும், 30 சதவீதம் கடனாகவும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள மாநிலத்துக்கு, 90 சதவீதம் மானியமாகவும், 10 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும். சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான வழிமுறைகள், 1960களில் உருவாக்கப்பட்டன. ஒரு மாநிலத்தின் இயற்கை வளங்கள், மக்கள் தொகை அடர்த்தி, பழங்குடியினரின் எண்ணிக்கை, நிலப்பரப்பின் தன்மை உள்ளிட்டவற்றின் அடிப் படையில் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படலாம். மேலும், மத்திய வரி வருவாயை பகிர்ந்தளிப்பதில், மத்திய நிதிக் குழு முன்னுரிமை அளிக்கும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (23)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply