சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக, இளவரசியின் மகன் விவேக்கிடம், இரண்டே கால் மணி நேரம் விசாரணை நடந்தது.
ஜெ., மரணம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகனும், ஜெயா, 'டிவி' தலைமை செயல் அதிகாரி யுமான, விவேக், நேற்று இரண்டாவது முறையாக, விசாரணை கமிஷனில் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அவரிடம் காலை, 10:30க்கு, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டார். பூட்டிய அறையில், பகல், 12:45 வரை விசாரணை நடந்தது. 'ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, அவரை பார்த்தீர்களா; அவர் மருத்துவமனையில் இருப்பது போன்ற, 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. அதை எடுத்தது யார்? 'உங்களிடம் நிறைய வீடியோக்கள் உள்ளதாக கூறப்படுகிறதே உண்மையா; எத்தனை வீடியோக்கள் உள்ளன' என, நீதிபதி சரமாரியாக கேள்விகள் கேட்க, அவற்றுக்கு விவேக் பதில் அளித்துள்ளார்.
விசாரணை முடிந்து, நிருபர்களிடம் விவேக் கூறுகையில், ''விசாரணை நடந்து வருவதால், நான் எதுவும் கூற முடியாது. வழக்கமான
கேள்விகளுக்கு, பதில் அளித்தேன். விசாரணை முடியட்டும்; அதன்பின் சொல்கிறேன். விசாரணை முடியும் போது, உங்களுக்கு அனைத்தும் தெரியவரும். உண்மையும் தெரிய வரும்,'' என்றார்.
35 பேரிடம் விசாரணை:
ஜெ., விசாரணை கமிஷன், நேற்று வரை, 35 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளது. சிலரிடம், இரு முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. டாக்டர்கள், விமலா, நாராயணபாபு, முத்துசெல்வன், கலா, டிட்டோ, தர்மராஜன், பாலாஜி சங்கர், ஜெ., அண்ணன் மகன், தீபக், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.
மேலும், ராமமோகன ராவ், வெங்கட்ரமணன், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி., ராமானுஜம், ஜெ., உதவியாளர், பூங்குன்றன், இளவரசி மகன், விவேக், சசிகலா அண்ணன் மகன், டாக்டர் சிவக்குமார் உட்பட, 28 பேரை, விசாரணை கமிஷன், 'சம்மன்' அனுப்பி விசாரித்தது.
அதேபோல், பிரமாண பத்திரம் தாக்கல் செய்த, தி.மு.க., பிரமுகர், டாக்டர் சரவணன், ஜெ., அண்ணன் மகள், தீபா, அவரது கணவர், மாதவன் என, ஏழு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்று வரை மொத்தம், 35 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.
மீண்டும் ஆஜராக உத்தரவு!
ஜெ., உதவியாளர் பூங்குன்றன், ஏற்கனவே ஜன., 9ல் ஆஜரானார். அவர் மீண்டும், வரும், 12ல் ஆஜராக, விசாரணை கமிஷன்,
சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோல, சசிகலாவின் அண்ணன் மகனும், தினகரனின் மைத்துனருமான, டாக்டர் சிவக்குமார், ஜன., 8ல் ஆஜரானார். அவர் மீண்டும், வரும், 14ல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வெங்கட்ரமணன், 15ம் தேதி ஆஜராக உள்ளார். இவர், ஏற்கனவே, ஜன., 30ல் ஆஜராகி, விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி, 19ல், விசாரணை கமிஷனுக்கு விவேக் வந்தபோது, அவருடன் இருவர் மட்டும் வந்தனர். நேற்று அவருடன், 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். அனைவரும் விசாரணை கமிஷன் அலுவலகம் அமைந்துள்ள, முதல் தளத்திற்கு சென்றனர். அதை கண்ட நீதிபதி ஆறுமுகசாமி, 'டென்ஷன்' ஆனார்.விவேக் தவிர, மற்றவர்களை வெளியே அனுப்பும்படி உத்தரவிட்டார். உடன் விவேக், 'என் மாமனார், பாஸ்கர் வந்துள்ளார். அவரை மட்டும் அனுமதியுங்கள்' எனக் கூற, அவரை மட்டும் அனுமதித்தனர். வழக்கறிஞர்கள், அசோகன், முத்துகுமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (2)
Reply
Reply