புதுடில்லி : ''உலகுக்கே பெரும் சவாலாக உள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுடன், பிரான்ஸ் கைகோர்க்கும்,'' என, அந்நாட்டின் அதிபர், இமானுவேல் மக்ரோன் கூறினார்.
ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் அதிபர், இமானுவேல் மக்ரோன், நான்கு நாட்கள் பயணமாக, இந்தியாவுக்கு, நேற்று முன்தினம் இரவு வந்தார். டில்லி விமான நிலையத்தில், பிரதமர் மோடி, அவரை வரவேற்றார். மக்ரோனுடன், அவரது மனைவி, பிரிஜித் மற்றும் அமைச்சர்கள் வந்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில், நேற்று, மக்ரோனுக்கு, பாரம்பரிய முறைப்படி, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மக்ரோனை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வரவேற்றனர். இதன்பின், மக்ரோனை, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். இந்தியா - பிரான்ஸ் இடையே, 1998ல் கையெழுத்தான ராணுவ ஒப்பந்தத்தை, மேலும் வலுப்படுத்துவது பற்றி, இருவரும் விவாதித்தனர்.
இதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடியும், மக்ரோனும் பேச்சு நடத்தினர். அப்போது, இந்தியா - பிரான்ஸ் இடையே, ராணுவம், அணு சக்தி, கல்வி, சுற்றுச்சூழல், நகர மேம்பாடு, ரயில்வே ஆகிய துறைகளில், ௧௪ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்பின், பிரதமர் மோடியும், மக்ரோனும், கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது: ராணுவம் மற்றும் பாதுகாப்பில், இரு நாடுகளுக்கும் சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. இந்தியா - பிரான்ஸ் இடையேயான ராணுவ உறவின் வயது, 200 ஆண்டாக இருக்கலாம்.ஆனால், இரு நாடுகளுக்கு இடையேயான கலாசார உறவு, மிகவும் பழமையானது. சுதந்திரம், சமதர்மம், சகோதரத்துவம் ஆகியவை, இந்தியா மற்றும் பிரான்சின் அரசியல் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
பிரான்ஸ் அதிபர், மக்ரோன் கூறியதாவது: உலகுக்கே இன்று பெரும் அச்சுறுத்தலாக, பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தால், பிரான்சும் பாதிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுடன், பிரான்ஸ் கைகோர்க்கும். பிரான்ஸ் ராணுவத்தின் முதல் கூட்டாளியாக, இந்தியா இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து