அமராவதி : ''பா.ஜ.,வுடன் அமைத்த கூட்டணியால், ஆந்திராவுக்கும், தெலுங்கு தேச கட்சிக்கும், எந்த பயனும் கிடைக்கவில்லை,'' என, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததால், மத்திய அமைச்சரவையிலிருந்து, தெலுங்கு தேச அமைச்சர்கள், நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், அமராவதியில், சந்திரபாபு நாயுடு கூறியதாவது: பா.ஜ.,வுடன், 2014ல் நடந்த லோக்சபா மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலில், கூட்டணி அமைத்தோம். ஆனால், அதற்கு முன்பே, ஆந்திராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்றோம். அதனால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததால், தெலுங்கு தேசத்துக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
ஒருங்கிணைந்த மாநிலத்தை, எந்த திட்டமிடலும் இன்றி, அவசர அவசரமாக, அப்போது, மத்தியில் இருந்த, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிரித்தது. இதனால், ஆந்திரா பெரிதும் பாதிக்கப்பட்டது. இதற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான், பா.ஜ.,வுடன், தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்தது.
ஆந்திர மாநில மறுவரையறை சட்டத்தில் கூறியுள்ள வாக்குறுதிகளை, மத்திய அரசு
நிறைவேற்றும் என, நான்கு ஆண்டுகள் காத்திருந்தோம்; எதுவும் நடக்கவில்லை. இதனால் தான், அமைச்சரவையிலிருந்து வெளியேறினோம்.
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய, மூத்த தலைவர்கள் மற்றும் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, சந்திரபாபு நாயுடு கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து