புதுடில்லி : 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, காங்., மூத்த தலைவர், சிதம்பரத்தின் மகன், கார்த்தியின், சி.பி.ஐ., காவலை, மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த, 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' என்ற நிறுவனம், 2007ல், வெளிநாட்டு முதலீடாக, 307 கோடி ரூபாயை பெற முயற்சி செய்தது. அப்போது, மத்திய நிதி அமைச்சராக, சிதம்பரம் இருந்தார். அவரது மகன் கார்த்தி, அந்த நிறுவனத்திற்கு, அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற்றுத் தந்தார்.
இதற்காக, அந்த நிறுவனம், கார்த்திக்கு, பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, சி.பி.ஐ.,யும், அமலாக்கத்துறையும் விசாரிக்கின்றன.
இந்த வழக்கு தொடர்பாக, கார்த்தியை, சி.பி.ஐ., அதிகாரிகள், சமீபத்தில் சென்னையில் கைது செய்து, டில்லிக்கு அழைத்துச் சென்றனர்.
கார்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க, முதலில், ஐந்து நாட்களும், அதன் பின், மேலும் மூன்று நாட்களும் நீட்டித்து, சி.பி.ஐ.,க்கு, டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், மூன்று நாள் காவல் முடிந்த நிலையில், கார்த்தியை, நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று ஆஜர் படுத்தினர். ஜாமின் வழங்கக் கோரி, கார்த்தி சார்பில், அவரது வழக்கறிஞர், அபிஷேக் சிங்வி மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த, சி.பி.ஐ., வழக்கறிஞர், 'விசாரணைக்கு கார்த்தி முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதனால், அவரது காவலை, மேலும், ஆறு நாட்கள் நீட்டிக்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, கார்த்தியின், சி.பி.ஐ., காவலை, மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, சுனில் ராணா, அவரது ஜாமின் மனு மீதான விசாரணையை, 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கைதுக்கு தடை:
ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக, அமலாக்க துறையும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், தன்னை, அமலாக்க துறை கைது செய்ய, தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், கார்த்தி, மனு தாக்கல் செய்திருந்தார். 'இந்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, கார்த்தி தாக்கல் செய்த மனுவை, நேற்று விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணை வரை, கார்த்தியை கைது செய்ய, அமலாக்கத்துறைக்கு தடை விதித்தது. விசாரணையை, வரும், 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து