விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து | வட சென்னை, சமந்தா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ? | சினிமாவில் களமிறங்கும் இரண்டு வாரிசுகள் | சூப்பர் ஸ்டார் இல்லை... ரஜினியிடம் ஏற்பட்ட மாற்றம் | அருவி எடிட்டருக்கு கிடைத்த மலையாளப்படம் | ராணா படத்தில் 'அவதார்' பட டெக்னீஷியன் | பரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை | தென்னிந்தியாவில் தனுஷ் நம்பர் 1 | என் தந்தை மேக்கப் போட்டாலே முதலமைச்சர் ஆகிடுவாங்க : பி.வாசு | ஷகீலா வாழ்க்கை படத்தில் ரிச்சா சத்தா |
2018ம் ஆண்டின் இரண்டு மாதங்கள் வேகமாகக் கடந்துவிட்டன. இந்த இரண்டு மாதங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. ஆனால், அவற்றில் ஒரு படம் கூட முத்திரை பதிக்கவில்லை என்பது சோகமான உண்மை. எதிர்பார்க்கப்பட்ட படங்களே வெற்றி பெறாத போது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த படங்கள் எப்படி வெற்றி பெறும்.
ஜனவரி மாதத்தில் பொங்கலை முன்னிட்டு வந்த பெரிய நடிகர்களின் படங்கள் கூட வசூல் ரீதியாக வெற்றி பெற முடியாமல் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. நல்ல வேளையாக நஷ்டத் தொகை என்பது அதிகமாக இல்லாமல் போனது பெரிய விஷயம்.
பிப்ரவரி மாதத்திலாவது சில படங்கள் எப்படியாவது வெற்றி பெற்று விடும் என்று திரையுலகில் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஜனவரி மாதத்தில் 13 படங்கள்தான் வந்தன. ஆனால், பிப்ரவரி மாதத்தில் 20 படங்கள் வெளிவந்தன. படங்களின் எண்ணிக்கை கூடுதலாக அமைந்தாலும் வெற்றி என்பது கூடவேயில்லை.
பிப்ரவரி 2ம் தேதி “மதுர வீரன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், படை வீரன், விசிறி, ஏமாலி” ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி படம் அமையாததால் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தது. மற்ற படங்களில் படை வீரன் மட்டுமே ஓரளவிற்கு விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றது.
பிப்ரவரி 9ம் தேதி “கலகலப்பு 2, நரிவேட்டை, சவரக்கத்தி, சொல்லிவிடவா” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் கலகலப்பு 2 படம் மட்டும் கொஞ்சம் சிரிக்க வைக்கும் படமாக அமைந்தது. இருந்தாலும் முதல் பாகம் அளவிற்கு வசூல் படமாக அமையவில்லை.
சவரக்கத்தி படம் வித்தியாசமாக இருந்தாலும் ரசிகர்களை வரவேற்கும் அம்சங்கள் அதிகம் இல்லாததும், நடித்தவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததும் படத்திற்கு தோல்வியாக அமைந்தது. மற்ற படங்கள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
பிப்ரவரி 16ம் தேதி “மனுசனா நீ, மேல்நாட்டு மருமகன், நாகேஷ் திரையரங்கம், நாச்சியார், வீரா” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படம் எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தாமல் போனது ஆச்சரியம்தான். பொதுவாக அவர் இயக்கும் படம் என்றாலே வெளியீட்டிற்கு முன்பே ஒரு பரபரப்பு இருக்கும். இந்தப் படத்திற்கு அது இல்லாமல் போனது. மற்ற படங்கள் 2018ம் ஆண்டின் படங்களின் எண்ணிக்கையைக் கூட்டிய படங்கள்.
பிப்ரவரி 23ம் தேதி “6 அத்தியாயம், கூட்டாளி, காத்தாடி, கேணி, மெர்லின், ஏன்டா தலையில எண்ண வெக்கல” ஆகிய படங்கள் வெளிவந்தன. ஒரே நாளில் இத்தனை சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவந்தன. ஒரு படம் கூட ரசிகர்களிடம் பெரிய ஈடுபாட்டைக் காட்டவில்லை. சிறிய பட்ஜெட் படங்களை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியாமல் அதன் தயாரிப்பாளர்கள் பெரிதும் திணறி வருகிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது வழி முறை கண்டுபிடித்தால்தான் சிறிய பட்ஜெட் படங்களுக்கு எதிர்காலம் இருக்கும்.
நாச்சியார், கலகலப்பு 2, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய படங்கள்தான் பிப்ரவரி மாதத்தில் வெளியான 20 படங்களில் ஓரளவிற்காவது ரசிகர்களைச் சென்றடைந்த படங்கள். வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் வெற்றிக்கு அருகில் இந்தப் படங்கள் சென்றன. இந்தப் படங்களால் ஏற்பட்டிருக்கும் நஷ்டம் தாங்கக் கூடிய நஷ்டமாகவே சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கும்.
மார்ச் மாதத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் திரையிடல் கம்பெனிகளுடன் ஏற்பட்ட தகராறால் புதிய படங்களைத் திரையிடாமல் நிறுத்தியுள்ளார்கள். மேலும், பள்ளி பொதுத் தேர்வுகளும் நடந்து வருவதால் உடனடியாக புதிய படங்கள் வெளியாகும் சூழ்நிலையும் இருக்காது. இருந்தாலும் மார்ச் கடைசி வாரத்தில் ஐந்தாறு படங்களுக்கும் மேல் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
திரைப்பட வெளியீடுகளையும், தியேட்ர்கள் பிரச்சனைகளையும் ஒழுங்குபடுத்தினால் மட்டுமே தொடர்ந்து தமிழ்த் திரையுலகம் எந்த சிக்கலும் இல்லாமல் சீரிய நடை போடும்.
பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படங்கள்...
பிப்ரவரி 2 : மதுர வீரன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், படை வீரன், விசிறி, ஏமாலி
பிப்ரவரி 9 : கலகலப்பு 2, நரிவேட்டை, சவரக்கத்தி, சொல்லிவிடவா
பிப்ரவரி 16 : மனுசனா நீ, மேல்நாட்டு மருமகன், நாகேஷ் திரையரங்கம், நாச்சியார், வீரா
பிப்ரவரி 23 : 6 அத்தியாயம், கூட்டாளி, காத்தாடி, கேணி, மெர்லின், ஏன்டா தலையில எண்ண வெக்கல