வாஷிங்டன் : நாட்டின் பெரும் பணக்காரராக, தொடர்ந்து, ௧௧வது ஆண்டாக, ரிலையன்ஸ் குழும தலைவர், முகேஷ் அம்பானி நீடிக்கிறார். மேலும், சர்வதேச அளவில், பெரும் பணக்காரர்கள் பட்டியலில், 33வது இடத்திலிருந்து,19வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
அமெரிக்காவில் வெளியாகும், 'போர்ப்ஸ்' பத்திரிகை, சர்வதேச அளவில், பெரும் பணக்காரர்கள் பட்டியலை, ஆண்டுதோறும் வெளியிடுகிறது. ௨௦௧௮க்கான பட்டியலை, சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து உள்ளவர்கள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில், 2,208 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், அமெரிக்காவைச் சேர்ந்த,585 பேரும், சீனாவைச் சேர்ந்த,373 பேரும் இடம் பெற்று உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த, 121 பேர், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2017ல், இந்த பட்டியலில், இந்தியாவின் எண்ணிக்கை, 102 ஆக இருந்தது.
சர்வதேச அளவில், இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர், 'அமேசான்' நிறுவன அதிபர், ஜெப் பெசோஸ்; இவரது சொத்து மதிப்பு, 7.28 லட்சம் கோடி ரூபாய். உலக பணக்காரர்கள் பட்டியலில், நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த, 'மைக்ரோசாப்ட்' நிறுவனர், பில்கேட்சை, தற்போது, ஜெப் பெசோஸ் முந்தி உள்ளார்.
பில்கேட்சின் சொத்து மதிப்பு, 5.85 லட்சம் கோடி ரூபாய் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.மூன்றாவது இடத்தை, பங்குச் சந்தை முதலீட்டாளர், வாரன் பபெட் பிடித்துள்ளார்; இவரது சொத்து மதிப்பு, 5.46 லட்சம் கோடி ரூபாய். 2017ல் இவர், இரண்டாம் இடத்தில் இருந்தார்.
கடந்த ஓராண்டில், அமேசான் அதிபரின் சொத்து மதிப்பு, 2.54 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, பெரும் பணக்காரர்கள் பட்டியலில்,
10 ஆண்டுகளாக, முதலிடத்தில் நீடித்து வருபவர், ரிலையன்ஸ் குழும தலைவர், முகேஷ் அம்பானி. 2017ல், இவர், உலக பணக்காரர்கள் பட்டியலில், 33வது இடத்தில் இருந்தார்.
இந்நிலையில், 2018க்கான பட்டியலிலும், இந்தியாவின் பெரும் பணக்காரராக, முகேஷ் அம்பானியே நீடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு, 2.60 லட்சம் கோடி ரூபாய் என, குறிப்பிடப்பட்டுஉள்ளது. 2017ல், இவரது சொத்து மதிப்பு, 1.50 லட்சம் கோடி ரூபாய். ௨௦௧௮ல், இவரது சொத்து மதிப்பு, 1.10 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இதனால், சர்வதேச அளவில், பணக்காரர்கள் பட்டியலில், 33வது இடத்திலிருந்து, ௧௯வது இடத்துக்கு, முகேஷ் அம்பானி முன்னேறி உள்ளார்.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில், இரண்டாவது இடத்தை, 'விப்ரோ' நிறுவன அதிபர், அசிம் பிரேம்ஜியும், மூன்றாவது இடத்தை, உருக்காலை அதிபர், லட்சுமி மிட்டலும் பிடித்துள்ளனர்.போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில், சர்வதேச அளவில், 256 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த, எட்டு பெண் தொழிலதிபர்களும் உள்ளனர். இதில், முதலிடத்தை, சாவித்ரி ஜிண்டால் பிடித்துள்ளார்.
இவரது சொத்து மதிப்பு, 57 ஆயிரத்து, 200 கோடி ரூபாய். சர்வதேச அளவில், இவர், 176வது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில், 2017ல், 11 ஆயிரத்து, 7௦௦ கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், வைர வியாபாரி, நிரவ் மோடி இடம் பெற்றிருந்தார். ஆனால் இப்போது, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 12 ஆயிரத்து, 600 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். இதையடுத்து, இந்த ஆண்டு,சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில், நிரவ் மோடி பெயர் இடம் பெறவில்லை.
இந்திய பெரும் பணக்காரர்கள்
1. ரிலையன்ஸ் குழும தலைவர், முகேஷ் அம்பானி
2. விப்ரோ நிறுவன தலைவர், அசிம் பிரேம்ஜி
3. உருக்காலை அதிபர், லட்சுமி மிட்டல்
4. எச்.சி.எல்., நிறுவன தலைவர், ஷிவ் நாடார்
5. சன் பார்மாசூடிக்கல்ஸ் அதிபர், திலிப் சங்வி
6. ஆதித்ய பிர்லா குழும தலைவர், குமார் பிர்லா
7. கோட்டக் மகிந்திரா வங்கி துணைத் தலைவர், உதய் கோட்டக்
8. பங்கு சந்தை முதலீட்டாளர், ராதாகிருஷ்ணன் தமானி
9. அதானி குழும தலைவர், கவுதம் அதானி
10. பூனாவாலா குழும தலைவர், சைரஸ் பூனாவாலா
உலக பணக்காரர்கள் பட்டியலில், 1,394வது இடத்தை, 'பேடிஎம்' அதிபர், விஜய் சங்கர் சர்மா, 39, பிடித்துள்ளார். இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள, மிகக் குறைந்த வயதுள்ளவர், இவர் தான்; இவரது சொத்து மதிப்பு, 11 ஆயிரம் கோடி ரூபாய். 'பேடிஎம்' நிறுவனத்தை, 2011ல், சர்மா துவக்கினார். ஏழு ஆண்டுகளில், அவர் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில், அதிக வயதானவராக, 'அல்கிம்' நிறுவன முன்னாள் தலைவர், சம்பிரதா சிங், 92, உள்ளார். இவர், சர்வதேச பட்டியலில், 7,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், 1867வது இடத்தில் உள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து