சென்னை : ''மதவாத, பயங்கரவாத அமைப்புகள், தமிழகத்தில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சமூக விரோதிகள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு, நேற்று நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று, காவல் துறையினரிடையே, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தமிழகம் தொடர்ந்து, அமைதி பூங்காவாக திகழ்வதற்கும், பயங்கரவாத மற்றும் தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் இல்லாமல் கட்டுப்படுத்தியதற்காகவும், காவல் துறைக்கு என் பாராட்டு.
காவல் துறையினர்,சாதனைகள் பல புரிந்தாலும், நகர மயமாதல், மக்கள் பெருக்கம், போக்கு வரத்து நெரிசல், சமூக மாற்றங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் போன்றவற்றால், காவல் துறையினர் பல்வேறு விதமான, புதுப்புது சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மதவாதம், பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாத அமைப்புகள், தமிழகத்தில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சாலை விபத்துகளை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்; கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். காவல் நிலையங்களில் இறப்பு ஏற்படுவது, மக்களிடையே காவல் துறை மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடும்.
எனவே, இது போன்று மரணம் ஏற்படுவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும்.பெருகி வரும்
தகவல் தொடர்பு சாதனங்களால், புது வகையான குற்றங்கள் தலைதுாக்கி வருகின்றன. அவற்றை தடுக்க, போலீசார் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, பதில் வினை புரிய வேண்டும்.
மாவட்டங்களில், தனிப்படைகள் அமைத்து, சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்; போக்கிரி நடவடிக்கைகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். சமூக விரோதிகள் யாராக இருந்தாலும், பாரபட்ச மின்றி, சட்டப்படியான கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வட மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்து, தமிழகத்தில் குற்றச் செயல்கள் புரிந்து, தங்கள் மாநிலங்களுக்கு தப்பி ஓடும் நிகழ்வுகள் பதிவாகி வருகின்றன. இதற்கு உடந்தையாக இருந்து, குற்றச் செயல்களில் ஈடுபடும், தமிழகத்தில் உள்ள சமூக விரோத சக்திகளையும் ஒன்றாக கண்டறிந்து, அவர்களை ஒடுக்க வேண்டும்.
நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், போலீசாருக்கு பயிற்சி அளிக்கவும், காவல் துறையை நவீனமயமாக்கவும், உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநிலத்தில், பெரும்பாலான காவல் நிலையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன; இல்லாத இடங்களில் பொருத்த வேண்டும்.
பொதுமக்களிடம், போலீசார் நன்மதிப்பு பெற, காவல் நிலையங்களுக்கு வருவோரை,மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகள் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதில், சுணக்கம் காட்டுவதோ, காவல் நிலைய எல்லையை காரணம் காட்டி, புகார்தாரர்களை அலைக்கழிப்பதோ கூடாது.
காயமடைந்து வருவோருக்கு, உடனடியாக மருத்துவ வசதி செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தால், போலீசார் மீதான பொதுமக்களின் மதிப்பு உயரும்.ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்தல், லாட்டரி சீட்டு விற்பனை, போதை மருந்து கடத்தல், பொருளாதார குற்றங்கள், சூதாட்டம், வீடியோ கேம்ஸ், திருட்டு, 'விசிடி' போன்ற சமுதாய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறையில் இருக்கும் சில குற்றவாளிகள், வெளிநபர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, புதிய குற்றங்கள் நடக்க காரணமாக இருந்தால், போலீசார், சிறை துறையினருடன் இணைந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள் நடத்தும் கூட்டங்களில், போலீஸ், எஸ்.பி.,க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
காவல் துறையினருக்கு, தேவையானவற்றை செய்து கொடுக்க, அரசு தயாராக உள்ளது.அனைத்து வகையிலும், உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருந்த போதிலும், சில சமயங்களில், ஆங்காங்கு நடைபெறும் சில சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் தொய்வு ஏற்படுவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இது, ஒரு சிலர் குறை கூற ஏதுவாக அமைந்து விடுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்து, உங்கள் பணிகளை, மேலும் சிறக்க செய்ய வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து