ராஜ்யசபாவில் நேற்று, மகளிர் தினத்தையொட்டி நடந்த சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற, தி.மு.க., - எம்.பி., சிவா, ''சானிடரி நாப்கினுக்கு விதிக்கப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும்,'' என பேசியதற்கு, அனைத்து, எம்.பி.,க்களும் பாராட்டு தெரிவித்தனர்.
வங்கி மோசடி உட்பட, பல்வேறு பிரச்னைகள் குறித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், நேற்று, சர்வதேச மகளிர் தினம் என்பதால், ராஜ்யசபாவில், இது குறித்து பேசுவதற்கு, அனைத்து கட்சிகளுக்கு இடையிலும், உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, பெண், எம்.பி.,க்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அனைத்து பெண், எம்.பி.,க்களும் பேச அனுமதிக்கப்பட்டனர். தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசியதாவது:அம்மா, சகோதரி, மனைவி என, எங்கள் தியாகத்தை போற்றுவதை காட்டிலும், எங்களது சுய அடையாளத்திற்கு உரிய அங்கீகாரத்தை,
இந்த சமூகம் வழங்கினாலே போதும். போற்றுதல்கள், வாழ்த்து கள் எல்லாம் அவசியமில்லை; உரிமைகள் தான் எங்களுக்கு வேண்டும்.
கிராமப்புறங்களில், பெண் சிசு கொலை, வரதட்சணை, பாலியல் குற்றம், ஊட்டச்சத்து குறைபாடு என, நிறைய கொடுமைகள் இன்னும் தொடர்கின்றன. இதை தடுக்க வேண்டும்.மகளிர் மசோதாவை, எல்லா கட்சிகளுமே ஆதரிக்கின்றன. ஆனாலும், அந்த மசோதா, இன்னும் அந்தரத்தில் தொங்குவது, வெட்கக் கேடாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்பதில், மறு கேள்விக்கே இடமில்லை. பெண்களை வாழ்த்துகிறோம்; போற்றுகிறோம்; எல்லாம் சரி.பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியமான, சானிடரி நாப்கினுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு உள்ளதை மறந்து விடுகிறோம். மகளிர் தினத்தை முன்னிட்டு, அந்த வரியை நீக்கம் செய்வதற்கு, மத்திய அரசு முன்வருமா...இவ்வாறு சிவா பேசியதும், சபையில் இருந்த ஒட்டுமொத்த, எம்.பி.,க்களும் மேஜையை தட்டி, ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இதனால், சபையே அதிர்ந்தது. சபைத் தலைவர், வெங்கையா நாயுடுவும், ''மிகச் சரியான பரிந்துரை; வரவேற்கிறேன்,'' என, பாராட்டினார்.இந்த விவாதத்துக்கு பின்,
வேறு அலுவல்களை தொடர முற்பட்ட போது, எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கவே, ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பார்லி., வளாகத்தில் உள்ள, காந்தி சிலை முன், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நேற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். லோக்சபாவிலும், காலை முதலே அமளி நிலவியது. காங்கிரஸ், அ.தி.மு.க., திரிணமுல், தெலுங்கு தேசம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே, தங்களது கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்தனர். அலுவல்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், சபை, நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
- நமது டில்லி நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (10)
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply
Reply