காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தை சேர்ந்த, அனைத்து கட்சி, எம்.பி.,க்களும், பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியிலும் நேற்று நடத்திய போராட்டத்தால்,பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கோரிக்கைக்காக, லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை தலைமையில், பார்லிமென்ட் வளாகத்தில், தமிழக, எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக கூறப்பட்டது.
கோஷங்கள்
இந்நிலையில், பார்லி., வளாகத்தில் உள்ள, காந்தி சிலை முன், தமிழக, எம்.பி.,க்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்; ஆனால், தம்பிதுரை இதில் பங்கேற்கவில்லை.மொத்தம், 50 எம்.பி.,க்களை வைத்துள்ள, அ.தி.மு.க.,விலிருந்து, 37 பேர் மட்டுமே, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுடன், தி.மு.க., - எம்.பி.,க்களும் இணைந்தனர். ஒரே வரிசையாக நின்ற அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கோஷங்களின் முன் பகுதியை, தி.மு.க., - எம்.பி., சிவா முழக்கமிட, அவற்றின் பின்பகுதியை, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சத்தமாக கூறி, கோஷமிட்டனர். தி.மு.க.,வினரின் கோஷத்துக்கு பின்பாட்டு பாடுவதுபோல, இது இருக்கவே, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, எம்.பி.,க்கள் சுதாரித்தனர்.
வேணுகோபால், குமார் உள்ளிட்ட சில, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், அதே ஆர்ப்பாட்டத்தின் மற்றொரு பகுதியில், தாங்களாகவே கோஷங்களை எழுப்பினர். இதனால், ஒரே வரிசையில், இரண்டு மூன்று கோஷங்களை கேட்க நேரிட்டது.
அப்போது, அந்த இடத்திற்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த, இல.கணேசன் வந்தார். அவரைப் பார்த்ததும், கோஷங்களின் சத்தம் அதிகரித்தது. அவரும், சிரித்தபடியே அனைத்து, எம்.பி.,க்களுக்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துச் சென்றார்.ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு, சபைக்குள் சென்ற, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கடும் ஆவேசத்தை காட்டினர். லோக்சபா, ராஜ்யசபா என, இரண்டிலுமே, எதிர்க்கட்சி களின் அமளியில், அ.தி.மு.க.,வின் அமளியே அதிகமாக இருந்தது.
எதிர்ப்பு
மத்திய அமைச்சர், அனந்த குமார் பேசுகையில், அவரது முகத்துக்கு எதிராக, குமார் உள்ளிட்ட, எம்.பி.,க்கள், போஸ்டர்களை காட்டி, எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜ்யசபாவிலும் இதே நிலை தான். சபைகள் ஒத்திவைக்கப்பட்ட பின், வழக்கம்போல, எம்.பி.,க்களுடன், புல்வெளிக்கு வந்த, துணை சபாநாயகர் தம்பிதுரை, நிருபர்களிடம் கூறுகையில், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை, பார்லி மென்டை நடத்த விட மாட்டோம்,'' என்றார்.
சபையை நடத்தும் பொறுப்பில் உள்ள, துணை சபாநாயகர் என்ற மிக முக்கிய பதவியில் இருப்பவரே, 'சபையை நடத்த விட மாட்டோம்' என கூறியதை கேட்டு, பலரும் ஆச்சரியப்பட்டனர்.
நேற்று லோக்சபா கூடியதும், காங்கிரஸ் உட்பட, எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கவே, ஓரிரு நிமிடங்களில் சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோது, அலுவல்களை தொடர, சபாநாயகர், சுமித்ரா மகாஜன் முயன்றார்; ஆனால், முடியவில்லை. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கடன் மோசடி விவகாரத்தை முன்வைத்து, காங்கிரஸ், எம்.பி.,க்களுடன் இணைந்து, திரிணமுல் காங்கிரஸ், எம்.பி.,க்களும் அமளியில் இறங்கினர். சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி, ஆந்திர, எம்.பி.,க்களும் கோஷமிட்டனர். இந்த அமளியில், இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கட்சி உறுப்பினர்களும் இணைந்தனர். சபையே அமளிக்காடாக மாறியது. சபாநாயகர் இருக்கை முற்றுகையிடப்பட்டது. மேஜை முன் அமர்ந்திருந்த லோக்சபா அலுவலர்கள், தங்கள் பணிகளை செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மோசமானதால், சபை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில், காலை முதலே அமளி துவங்கியது. கடும் அதிருப்தியடைந்த, சபைத் தலைவர், வெங்கையா நாயுடு, ''எம்.பி.,க்களின் செயல்களை நாடே பார்க்கிறது. அவர்கள், இவ்வாறு நடப்பது, வருத்தமளிக்கிறது,'' என்றார். மீண்டும் சபை கூடியபோதும், நிலைமை சீரடையவில்லை. இதனால், நாள் முழுவதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
- நமது டில்லி நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து