அகர்தலா : ''திரிபுரா மக்கள், என் உயிருக்கும் மேலானவர்கள். அவர்களின் நலனுக்காக, கடுமையாக உழைக்க காத்திருக்கிறேன்,'' என, அம்மாநில முதல்வராக பதவியேற்க உள்ள, பா.ஜ.,வின், பிப்லப் தேவ், நெகிழ்ச்சியுடன் கூறினார்.
வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மாணிக் சர்க்கார் தலைமையில் நடந்த, மார்க்.கம்யூ., ஆட்சிக்கு, பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கவர்னர் அழைப்பு
இந்நிலையில், பா.ஜ., வின், சட்டசபை கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம், அகர்தலாவில் நேற்று நடந்தது.இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள், 43 பேரும் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி, இந்த கூட்டத்துக்கு, மேலிட பார்வையாளராக வந்திருந்தார்.இதில், பா.ஜ.,வின், பிப்லப் தேவ், 48, கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து, கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். வரும், 9ல், பிப்லப் தேவ் தலைமையிலான, புதிய அமைச்சரவை பதவியேற்க, கவர்னர் அழைப்பு விடுத்தார்.
தீவிர பயிற்சி
இந்நிலையில், பிப்லப் தேவ், செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: நான், திரிபுராவைச் சேர்ந்தவன் என்றாலும், 15 ஆண்டுகளாக, டில்லியில் இருந்தேன். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இணைந்து, தீவிர பயிற்சி பெற்றேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான், திரிபுராவுக்குவந்தேன்.
பா.ஜ.,வுக்கு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில், மும்முரமாக செயல்பட்டேன்.இந்த உழைப்பின் பலனாக, முந்தைய சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத, பா.ஜ., இப்போது, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து, 43 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு, திரிபுரா மக்களின் அன்பு தான் காரணம்.
திரிபுரா மக்களை, என் உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன். நாம், வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல், திரிபுரா மக்கள், எனக்கு முக்கியம்.என் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த பெரும் மாற்றத்துக்கு, திரிபுரா மக்கள் தான் காரணம்; கண்டிப்பாக, அவர்களுக்கு நல்லது செய்வேன்.
மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், திரிபுராவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக பதவி வகித்தவருமான, மாணிக் சர்க்கார் மீது, மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்துள்ளேன்.திரிபுராவை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதற்கு, அவருக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரும், மார்க்சிஸ்ட் கட்சியினரும், அதை பயன்படுத்தவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சியினரால் முடியாததை, கண்டிப்பாக, நாங்கள் செய்வோம். இனி, புதிய திரிபுராவை, நம் நாட்டு மக்கள் பார்க்கலாம். அதற்காக, உழைக்கப் போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து